Wednesday, May 11, 2011

தமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........

2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனி தேசத்தினை ஹிட்லர் தலைமையிலான நாசிப் படையினர் ஆட்சி செய்தபோது ஹிடலரின் தொல்லைகளினால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தமது நோபல் பரிசுப் பதக்கங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கருதி ஜேர்மனியினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோர் தமது நோபல் பரிசுப் பதக்கங்களினை ஹிட்லரின் நாசிப் படையினருக்குப் பயந்து சட்டவிரோதமாக டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த பெளதிகவியலாளர் நீல்ஸ் பொஹ்ர் அவர்களிடம் கையளித்தனர்.

மக்ஸ் வொன் லோவ்



ஆனால் 2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனியானது, டென்மார்க் நாட்டினை ஆக்கிரமித்து தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபோது மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோரின் நோபல் பரிசுப் பதக்கங்களினை ஜேர்மனிய நாசிப் படையினரிடமிருந்து பாதுகாப்பதற்கு நீல்ஸ் பொஹ்ர் தீவிர கரிசனை காட்டினார். தனது ஆய்வுகூடத்தில் பணியாற்றிய ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த ஜோர்ஜ் டி ஹெவிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய நோபல் பரிசு தங்கப் பதக்கங்களினை Aqua regia அமிலத்திராவகத்தில் கரைக்க முடிவெடுத்தார். (Aqua regia திராவகம் என்பது தங்கத்தைக் கரைக்கப் பயன்படுத்தப்படும் நைதரிக்கமிலம் + ஐதரோகுளோரிக் அமிலம் ஆகிய அடர் அமிலங்களின் கலவை ஆகும்)

நோபல் பரிசுப் பதக்கங்கள் மறைத்துவைக்கப்பட்ட அமிலத்திராவகப் போத்தலானது, ஏனைய அமிலத் திராவகப் போத்தல்களோடு போத்தலாக அலுமாரித்தட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜேம்ஸ் பிரான்ங்



2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர், அமிலத் திராவகத்தில் கரைந்திருந்த நோபல் பரிசு தங்கப் பதக்கங்கள் நோபல் பரிசு அமையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாக நோபல் பரிசு அமையம், மாதிரிப் பதக்கங்களினை மக்ஸ் வொன் லோவ் மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோருக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்ஸ் வொன் லோவ் 1914ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜேம்ஸ் பிரான்ங் 1925ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீல்ஸ் பொஹ்ர் 1922ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜோர்ஜ் டி ஹெவிஸ் 1943ம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin