Thursday, October 2, 2014

மகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அஞ்சல் துறை…!


இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 145வது ஜனன தினம் இன்றாகும். இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை கெளரவப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகள் அஞ்சல்களை வெளியிட்டுள்ளன. அவை தொடர்பான சில சுவையான தகவல்கள் இதோ…!
  • மகாத்மா காந்தி அவர்களினை கெளரவப்படுத்தி முதல் தபால் முத்திரையினை இந்தியா 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட்டது.
  • இந்திய தேசம் நீங்கலாக, உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகள் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அஞ்சல்களை வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். 1961ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி இம்முத்திரை வெளியிடப்பட்டது. இரண்டாவது நாடு கொங்கோ, 1967ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.
  • மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இதே தினத்தில் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி 40இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் தபால் முத்திரையினை வெளியிட்டன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் அட்டையினை வெளியிட்ட முதல் நாடு போலந்து ஆகும்.
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி நினைவுத் தபால் உறையினை வெளியிட்ட முதல் நாடு ரொமானியா ஆகும்.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு மியன்மார் ஆகும். செக்கோஸ்லாவியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்டுள்ளன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இலங்கை 1988ம் ஆண்டு 75சத பெறுமதியான முதல் தபால் முத்திரையினை அவரின் 40வது நினைவு தினத்தில் வெளியிட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சர்வதேச வன்முறையற்ற நாளாக 2007ம் பிரகடனப்படுத்தியது. இதற்கு மேலதிகமாக 2009ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்டது.
***

Thursday, September 25, 2014

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒருபார்வை….!




17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் (ஆசியாட்) தென்கொரியாவின் இன்சொன் நகரில் கடந்த செப்டெம்பர் 19-ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின.




16 தினங்கள் நீடிக்கும் இப்போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13,000 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 17வது ஆசிய விளையாட்டு விழாவில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.


1986 (சியோல்), 2002 (பூசான்) ஆகிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக (2014 இன்சொன்) தனது சொந்த மண்ணில் தென்கொரியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அரங்கேற்றுகின்றது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்…!
  • 1வது ஆசியவிளையாட்டுப் போட்டி இந்தியாவின் புதுடில்லி நகரில் 1951ம் ஆண்டு மார்ச் 4-11ம் திகதி வரை நடைபெற்றன. இதில் 11 நாடுகளின் பங்கேற்புடன், 6 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 491 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • 1982ம் ஆண்டுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஆசிய விளையாட்டுகள் சம்மேளனம் ஒழுங்கமைத்தது ஆனால் தற்சமயம் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைத்து வருகின்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அதிக தடவைகள் நடாத்திய நாடு தாய்லாந்து ஆகும். 1966, 1970, 1978, 1998 ஆகிய ஆண்டுகளில் தாய்லாந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியுள்ளது.


தாய்லாந்து, பாங்கொக் நகரில் இதுவரை நடைபெற்ற 4 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் டிசம்பர் 20ம் திகதியிலேயே நிறைவுற்றுள்ளன என்பது சிறப்பு அம்சமாகும். அத்துடன் இப்போட்டிகள் அனைத்தும் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேவ் அவர்களினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் வீரர் சிங்கப்பூரினைச் சேர்ந்த N.C.கொக். (1500 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல்)
  • 1994ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான், ஹீரோசிமா நகரில் நடைபெற்றன. தலைநகருக்கு வெளியே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.
  • இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மாலைதீவு, பூட்டான், கிழக்கு தீமோர் ஆகிய நாடுகள் ஒரு பதக்கத்தினையேனும் வெற்றிகொள்ளவில்லை.
  • இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்ற மொத்த நாடுகள் 7ஆகும். அவையாவன; இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகியனவாகும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் 8 அத்தியாயங்களிலும் (1951-1978) தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை ஜப்பான் வகித்து வந்தது, ஆயினும் 1982ம் ஆண்டிலிருந்து இற்றைவரை பதக்கப் பட்டியலில் முதல் இடத்தினை சீனா தனதாக்கிக் கொண்டது.
  • பொருளாதார நெருக்கடி காரணமாக 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமுடியாது என வியட்நாம் அறிவித்ததையடுத்து, 2019ம் ஆண்டு (2018-ம் ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டது) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 1962-ல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1962ஜகார்த்தா) தங்கப்பதக்கம் வென்ற முதல் மலேசிய வீரர் DR.மணி ஜெகதீசன்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1951 புதுடில்லி) பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் மொஹமட் அக்பர். இவர் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் (3.38மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1958 டோக்கியோ) தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ஆவார். இவர் உயரம் பாய்தல் போட்டியில் (2.03மீற்றர்) தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1962 ஜகார்த்தா) பதக்கம் வென்ற முதல் இலங்கை வீராங்கனை நிர்மலா திசாநாயக்க. இவர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.
 ***

Tuesday, August 19, 2014

அனைவரையும் கவர்ந்த புகைப்படக் கலை …!

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக புகைப்பட தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.


Louis Daguerre அவர்களினால் ஒளிப்படமெடுத்தல் செயற்பாட்டு அபிவிருத்தியில் துணைபுரிந்த Daguerreotype கண்டுபிடிக்கப்பட்டதே உலக புகைப்பட தினம் தோற்றம்பெறுவதற்கு காரணமாக விளங்கியது.

ஜனவரி 9, 1839ம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞான அறிவியற் கழகமானது Daguerreotype இனது செயற்பாடுகளை அறிவித்தது. சில மாதங்களின் பின்னர் ஆகஸ்ட் 19, 1839ம் ஆண்டு இந்தக் கண்டுபிடிப்பினை உலகுக்கான இலவசப்பொருளாக பிரெஞ்சு அரசாங்கமானது அறிவித்தது.

எனது புகைப்பட ஆர்வத்தினை Logan Photography Facebook பக்கத்தில் பகிர்ந்துவருகின்றேன். Logan Photography பக்கத்தில் இணைந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.


எனது சில Klick’s …!











உலக புகைப்பட தின வாழ்த்துக்கள்…!


***
Blog Widget by LinkWithin