கடந்த
13ம்
திகதி ஜேர்மனி, ஆர்ஜென்டீனா அணிகளுக்கிடையே பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, மரக்காணா மைதானத்தில்
நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் 90 நிமிட ஆட்டத்தில்
எந்த அணியும் கோல் பெறவில்லை, இதனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது, மேலதிக நேரத்தின்
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 113வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் சுயலி
அனுப்பிய பந்தினை மரியோ கோட்ஸே கோலாக மாற்றினார். மேலதிக நேர ஆட்டத்தில் பெற்ற அபார
கோலின் உதவியுடன் ஆர்ஜென்டீனா அணியை 1-0
என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளின் பின்னர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிக்
கொண்டது ஜேர்மனி அணி.
அந்தவகையில், ஒரேபார்வையில்
உலகக்கிண்ண கால்பந்தாட்ட சாதனை தொகுப்பு;
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், அதிக தடவைகள் (08) இறுதிப் போட்டியில் விளையாடிய அணியாக ஜேர்மனி அணி சாதனை படைத்தது.
- அமெரிக்கக் கண்டத்தில் சம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய அணி என்கின்ற பெருமையினை ஜேர்மனி அணி பெற்றுக்கொண்டது.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், மாற்று வீரராக களமிறங்கிய இறுதிப் போட்டியில் கோல் அடித்த முதல் வீரராக ஜேர்மனி அணியின் மரியோ கோட்ஸே சாதனை படைத்தார்.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், அதிக கோல்கள் அடிக்கப்பட்ட கால்பந்தாட்ட தொடர் என்கின்ற சாதனை சமப்படுத்தப்பட்டது. (64 போட்டிகள், 171 கோல்கள்)
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரொன்றில் அதிக கோல்களைப் பெற்ற அணி என்கின்ற சாதனையினை ஜேர்மனி சமப்படுத்தியது. (7 போட்டிகள், 18 கோல்கள்)
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், தரவரிசையில் முன்னிலையிலுள்ள பிரேசில், ஸ்பெய்ன், போர்த்துக்கல் அணிகள் தமது மிகமோசமான தோல்வியினை இந்த உலகக்கிண்ணத்தில் பதிவுசெய்து கொண்டன.
பிரேசில் எதிர் ஜேர்மனி (1-7)
ஸ்பெய்ன் எதிர் நெதர்லாந்து (1-5)
போர்த்துக்கல் எதிர் ஜேர்மனி (0-4)
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மாற்று வீரர்களாக களமிறங்கிய வீரர்கள் அதிக கோல்களை (32) அடித்த கால்பந்தாட்ட தொடர் என்கின்ற சாதனை நிகழ்த்தப்பட்டது.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், அதிக கோல்களை (16) பெற்றவர் என்கின்ற சாதனையினை ஜேர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் படைத்தார். இதற்கு முன்னர் பிரேசில் நாட்டின் ரொனால்டோ அதிக கோல்களை (15) பெற்றவர் என்கின்ற சாதனையினை நிலைநாட்டியிருந்தார்.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக கோல்களைப் (06) பெற்ற ஆபிரிக்க வீரராக கானா அணியின் அசமோ கயான் சாதனை படைத்தார்.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியொன்றில் 04 கோல்களை அடித்த முதல் ஆபிரிக்க நாடாக அல்ஜீரியா சாதனை படைத்தது.
- சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி, ஹொண்டுராஸ் அணிக்கெதிராக அடித்த ஹெட்ரிக் கோல்கள் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்களில் அடிக்கப்பட்ட 50வது ஹெட்ரிக் கோல்களாகும்.
அத்துடன் இது உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் (1966-2014)
முழுவதும்
இடது
காலால்
அடிக்கப்பட்ட
முதலாவது
ஹெட்ரிக்
கோல்கள்
ஆகும்.
- ஐக்கிய அமெரிக்காவின் கிளிண்ட் டெம்ப்சே, கானா அணியுடனான போட்டியில் 29வது செக்கனில் கோல் அடித்தார். இது, உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மிக விரைவாக பெறப்பட்ட 5வது அதி வேக கோலாகும்.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், கொலம்பிய நாட்டின் கோல்காப்பாளர் பார்ய்ட் மொண்ட்ரகோன் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடிய மிக வயதான (43 ஆண்டுகள், 03 நாட்கள்) வீரர் என்கின்ற சாதனையினை படைத்தார். (எதிர் ஜப்பான்)
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், ஹொண்டுராஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் (சமநிலை 3, தோல்வி 6) பங்குபற்றி ஒரு வெற்றியையேனும் பதிவு செய்யவில்லை.
- உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில், அதிக ஆட்டங்களுக்கு (09) நடுவராக கடமையாற்றி உஸ்பெக்கிஸ்தானின் ரவ்ஷான் இர்மாடோவ் சாதனை படைத்தார்.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட
விருதுகள்…!
- உலகக்கிண்ணப் போட்டிகளின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருது – லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)
- மிகச்சிறந்த கோல்காப்பாளருக்கான தங்கக்கையுறை விருது – மனுவல் நூயர் (ஜேர்மனி
- உலகக்கிண்ணத் தொடரில் கூடிய கோல்களைப் பெற்ற வீரருக்கான தங்கப்பாதணி விருது – ஜேம்ஸ் ரொட்ரிகுவேஸ்
- உலகக்கிண்ணத் தொடரின் மிகச்சிறந்த இளம் வீரருக்கான விருது – போல் பொக்பா (பிரான்ஸ்)
- உலகக்கிண்ணத் தொடரில் கண்ணியமாக விளையாடிய அணி என்கின்ற விருது - கொலம்பியா
***