Monday, March 9, 2015

ஆஸியிடம் பறிபோன இலங்கை அணியின் வெற்றி…!

11வது உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் "A" குழுவிற்கான  நேற்றைய ஆட்டம் (மார்ச் 8, 2015) அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது.  நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய  அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 376 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் 72 ஓட்டங்களினையும், கிளார்க் 68 ஓட்டங்களினையும், வொட்சன் 67 ஓட்டங்களினையும், மெக்ஸ்வெல் 53 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 102 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 312 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.  பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டத்தில் சாதிக்கத் தவறியதன் மூலம் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை அணி சார்பாக திலகரத்ன டில்சான் 62  ஓட்டங்களினையும், தினேஸ் சந்திமால் (உபாதை காரணமாக ஆட்டத்தினை தொடரவில்லை) ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களினையும், குமார் சங்கக்கார 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 104 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.


பல்வேறு சாதனைகள் புதுப்பிக்கப்பட்ட இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சுவாரஷ்சியமான சில சாதனைகள் வருமாறு;

  • அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல் 51 பந்துகளில் சதத்தினை பூர்த்தி செய்தார். இது உலகக்கிண்ணத்தில் பெறப்பட்ட 2வது அதிவேக சதம் ஆகும். மேலும், அவுஸ்திரேலிய அணியின் வீரரொருவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பெற்ற அதிவேக சதம் என்ற சாதனைக்குரியதாகும். இதற்கு முன்னர், ஜேம்ஸ் ஃபோக்னர் 2013ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக 57 பந்துகளில் பெற்ற சதமே சாதனையாகவிருந்தது. 


உலகக்கிண்ண கிரிக்கெட் – அதிவேக சதம் பெற்ற வீரர்களின் விபரம்;
  • *50 பந்துகள் – கெவின் ஓ பிரையன் – அயர்லாந்து v  இங்கிலாந்து, 2011
  • *51 பந்துகள் – கிளென் மெக்ஸ்வெல் – ஆஸி v இலங்கை, 2015
  • *52 பந்துகள் – ஏபி டி வில்லியர்ஸ் – தென்னாபிரிக்கா v மே.தீவுகள், 2015
  • *66 பந்துகள் – மத்தியு ஹெய்டன் – ஆஸி v தென்னாபிரிக்கா, 2007
  • *67 பந்துகள் – ஜோன் டேவிசன் – கனடா v மே.தீவுகள், 2003
  • அவுஸ்திரேலிய அணி பெற்ற 376 ஓட்டங்களே உலகக்கிண்ணத்தில் அணியொன்று இலங்கை அணிக்கெதிராகப் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும்.
இதற்கு முன்னர், 1999ம் ஆண்டு இந்திய அணி பெற்ற 373/6 ஓட்டங்களே சாதனையாக பதிவாகியிருந்தது.
  • 376 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கெதிராக அதிகூடிய மொத்த ஓட்டங்களை பதிவுசெய்தது. 
இதற்கு முன்னர், 2006ம் ஆண்டு அவ்வணி பெற்ற 368/5 ஓட்டங்களே சாதனையாக விளங்கியது.
  • இலங்கை அணி பெற்ற 312 ஓட்டங்கள் மூலம், உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 300 ஓட்டங்களை பெற்ற முதலாவது அணி என்ற சாதனையினை இலங்கை அணி படைத்தது.
  • உலகக்கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்கின்ற சாதனையினை இலங்கை அணியின் குமார் சங்கக்கார படைத்தார்.
105* v பங்களாதேஷ்
117* v இங்கிலாந்து
104 v அவுஸ்திரேலியா
  • ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை கடந்த 2வது வீரர் என்கின்ற பெருமையினை இலங்கை அணியின் குமார் சங்கக்கார பெற்றார். இந்த இலக்கினை அடைய சங்கக்கார 378 இன்னிங்ஸ்களையும், சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களையும் எடுத்துக்கொண்டனர். சங்கக்காரவைப் போலவே சச்சினும் சதத்தின் மூலம் இந்த இலக்கினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  2006ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் சச்சின் இந்த சாதனையினை படைத்தார்.
  • இலங்கை அணியின் தினேஸ் சந்திமால் 22 பந்துகளில் பெற்ற அரைச்சதமானது உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்ற அதிக வேக அரைச்சதமாகும்.

***

0 comments:

Blog Widget by LinkWithin