Wednesday, December 17, 2014

மழை…! மழை…! மழை…! சுவாரஷ்சியமான தகவல்கள்…!


மழை நாளில் மழை தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.   


  • மணித்தியாலத்திற்கு 0.10 அங்குலத்திற்கும் குறைவாக பெய்கின்ற மழை இலகு மழைவீழ்ச்சியாகவும், மணித்தியாலத்திற்கு 0.30 அங்குலத்திற்கும் அதிகமாகப் பெய்கின்ற மழை கன மழைவீழ்ச்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றது.
  • மழைத்துளிகள் அளவில் வேறுபடுகின்றன. அவை 0.02 அங்குலத்திலிருந்து 0.031 அங்குலம் வரையான விட்ட அளவினைக் கொண்டவையாகும்.
  • கன மழைத்துளிகளின் வேகம் மணித்தியாலத்திற்கு 22 மைல்களுக்கும் அதிகமாகும்.
  • மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்சமயம் பயன்படுத்துகின்ற குடைகள், ஆரம்ப காலங்களில் வெயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கே கண்டுபிடிக்கப்பட்டதாம்.
  • உலகில் அதிகளவில் மழைவீழ்ச்சி கிடைக்கின்ற நகரம் இந்தியாவின் சீறாபூஞ்சி ஆகும். இங்கே வருடாந்தம் 26,460 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
  • உலகில் அதிக எடையான ஆலங்கட்டி மழை 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் Gopalganj மாவட்டத்தில் பெய்தது. 1 கிலோகிராமிலும் அதிகமான எடையில் பனிக்கட்டியாக பெய்த இந்த மழையின் காரணமாக 92 பேர் மரணமடைந்தனர்.
  • ஐக்கிய அமெரிக்காவின், ஒகியோ மாநில வின்ஸ்பேர்க் நகரில் வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி நிச்சயமாக மழை பெய்கின்ற ஒரு நாளாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிசயம் நிகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • சாதாரண மழையின் அமிலத்தன்மை pH 5.6 ஆகும். இதனைவிடவும் pH மட்டம் குறைவடைகின்றபோது அது அமில மழையாகும். pH மட்டம் 5.5 ஆன மழையானது பக்றீரியாக்களைக் கொல்கின்றது, ஆனால் pH மட்டம் 4.5 ஆன மழையானது பூச்சிகள், மீன்கள், ஈரூடகவாழிகள் ஆகியவற்றினைக் கொல்கின்றது.
  • பொட்ஸ்வானா நாட்டின் நாணயம் "Pula" ஆகும். செட்ஸ்வானா மொழியில் "Pula"  என்பதன் அர்த்தம் "மழை" என்பதாகும். ஏனெனில் பொட்ஸ்வானா நாட்டில் மழை என்பது மிக அரிதான ஒன்றாகும்.
***


Thursday, December 4, 2014

ஹெட்ரிக்…! சில சுவாரஷ்சியமான தகவல்கள்…!


  • சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரினை பங்களாதேஷ் 5-0 என வெள்ளையடிப்பு செய்து சாதனை படைத்தது.
இந்த ஒருநாள் தொடரில், கடந்த டிசம்பர் 1ம் திகதி டாக்காவில் இடம்பெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹெட்ரிக் எடுக்கும் 4 ஆவது பங்களாதேஷ் பந்துவீச்சாளர் தைஜுல் ஆவார். இதற்கு முன்பு ஷஹாதது குசைன், அப்துர் ரசாக், மற்றும் ரூபல் குசைன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஹெட்ரிக் விக்கட் வீழ்த்தியோர் டேமியன் பிளெமிங் (அவுஸ்திரேலியா Vs பாகிஸ்தான் - 1994/95), பீற்றர் பெதரிக் (நியூசிலாந்து Vs பாகிஸ்தான் - 1976/77), மொரிஸ் அல்லோம் (இங்கிலாந்து Vs நியூசிலாந்து 1929/30) ஆகியோராவர்.
  • கிரிக்கெட் அரங்கில் அதிக எண்ணிக்கையான ஹெட்ரிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்ட ஆண்டு 1999 ஆகும். இந்த ஆண்டில் 4 ஹெட்ரிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
  • பாகிஸ்தான் அணியின் சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 4 ஹெட்ரிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த 4 ஹெட்ரிக் சாதனைகளும் இலங்கை அணிக்கெதிராகவே நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை புரிந்த ஒரே வீரர் இலங்கை அணியின் நுவான் சொய்ஸா ஆவார். சிம்பாப்வே அணிக்கெதிராக 1999/00ம் ஆண்டு ஹராரோயில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
  • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டு வகையான போட்டிகளிலும் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தியவர்கள் பாகிஸ்தான் அணியின் முஹம்மட் சமி மற்றும் வசிம் அக்ரம் ஆகியோராவர். குறிப்பாக, வசிம் அக்ரம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் தலா இவ்விரண்டு முறை ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தி கிரிக்கெட் அரங்கில் அதிக தடவை ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய வீரராக விளங்குகின்றார்.
  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் ஹெட்ரிக் சாதனையுடன், சதமும் பெற்ற ஒரே வீரர் பங்களாதேஷ் அணியின் சொஹக் காசி ஆவார். நியூசிலாந்து அணிக்கெதிரான (2013ம் ஆண்டு) டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளார். முறையற்ற பந்துவீச்சு காரணமாக சொஹக் காசிக்கு .சி.சி தற்சமயம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கிரிக்கெட் அரங்கில் மிக இளவயதில் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் பாகிஸ்தானின் அணியின் அகிப் ஜாவிட் ஆவார்.  1991ம் ஆண்டு சார்ஜாவில் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையினை நிகழ்த்தும்போது அகிப் ஜாவிட்டின் வயது 19 ஆண்டுகள் 81 நாட்கள் ஆகும்.
  • ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய ஒரேவீரர் அவுஸ்திரேலிய அணியின் ஜிம்மி மத்தியூஸ் ஆவார். 1912ம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் அவர் இந்த உலகசாதனையினை நிகழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ரொமி வார்ட்டினை ஒரே நாளில் இரண்டு தடவைகள் ஆட்டமிழக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
  • 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க ஆவார். 2007ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் மலிங்க இச்சாதனையினை நிகழ்த்தினார். அத்துடன், உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இரு தடவைகள் (2007 & 2011 Vs கென்யா) ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய ஒரே வீரர் என்கின்ற சாதனை மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய ஒரே வீரர் என்கின்ற சாதனையும் இவருக்கே உரியதாகும்.

Blog Widget by LinkWithin