Thursday, October 2, 2014

மகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அஞ்சல் துறை…!


இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 145வது ஜனன தினம் இன்றாகும். இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை கெளரவப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகள் அஞ்சல்களை வெளியிட்டுள்ளன. அவை தொடர்பான சில சுவையான தகவல்கள் இதோ…!
  • மகாத்மா காந்தி அவர்களினை கெளரவப்படுத்தி முதல் தபால் முத்திரையினை இந்தியா 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட்டது.
  • இந்திய தேசம் நீங்கலாக, உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகள் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அஞ்சல்களை வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். 1961ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி இம்முத்திரை வெளியிடப்பட்டது. இரண்டாவது நாடு கொங்கோ, 1967ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.
  • மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இதே தினத்தில் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி 40இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் தபால் முத்திரையினை வெளியிட்டன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் அட்டையினை வெளியிட்ட முதல் நாடு போலந்து ஆகும்.
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி நினைவுத் தபால் உறையினை வெளியிட்ட முதல் நாடு ரொமானியா ஆகும்.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு மியன்மார் ஆகும். செக்கோஸ்லாவியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்டுள்ளன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இலங்கை 1988ம் ஆண்டு 75சத பெறுமதியான முதல் தபால் முத்திரையினை அவரின் 40வது நினைவு தினத்தில் வெளியிட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சர்வதேச வன்முறையற்ற நாளாக 2007ம் பிரகடனப்படுத்தியது. இதற்கு மேலதிகமாக 2009ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்டது.
***

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான தகவல்கள்.
நன்றி.

Unknown said...

காந்திஜிக்கு இவ்வளவு நாடுகள் கௌரவப்படுத்தியும் ,ஏன் நோபல் பரிசு வழங்கப் படவில்லை என்று தெரியவில்லை !

Blog Widget by LinkWithin