Thursday, September 25, 2014

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒருபார்வை….!




17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் (ஆசியாட்) தென்கொரியாவின் இன்சொன் நகரில் கடந்த செப்டெம்பர் 19-ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின.




16 தினங்கள் நீடிக்கும் இப்போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13,000 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 17வது ஆசிய விளையாட்டு விழாவில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.


1986 (சியோல்), 2002 (பூசான்) ஆகிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக (2014 இன்சொன்) தனது சொந்த மண்ணில் தென்கொரியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அரங்கேற்றுகின்றது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்…!
  • 1வது ஆசியவிளையாட்டுப் போட்டி இந்தியாவின் புதுடில்லி நகரில் 1951ம் ஆண்டு மார்ச் 4-11ம் திகதி வரை நடைபெற்றன. இதில் 11 நாடுகளின் பங்கேற்புடன், 6 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 491 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • 1982ம் ஆண்டுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஆசிய விளையாட்டுகள் சம்மேளனம் ஒழுங்கமைத்தது ஆனால் தற்சமயம் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைத்து வருகின்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அதிக தடவைகள் நடாத்திய நாடு தாய்லாந்து ஆகும். 1966, 1970, 1978, 1998 ஆகிய ஆண்டுகளில் தாய்லாந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியுள்ளது.


தாய்லாந்து, பாங்கொக் நகரில் இதுவரை நடைபெற்ற 4 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் டிசம்பர் 20ம் திகதியிலேயே நிறைவுற்றுள்ளன என்பது சிறப்பு அம்சமாகும். அத்துடன் இப்போட்டிகள் அனைத்தும் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேவ் அவர்களினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் வீரர் சிங்கப்பூரினைச் சேர்ந்த N.C.கொக். (1500 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல்)
  • 1994ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான், ஹீரோசிமா நகரில் நடைபெற்றன. தலைநகருக்கு வெளியே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.
  • இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மாலைதீவு, பூட்டான், கிழக்கு தீமோர் ஆகிய நாடுகள் ஒரு பதக்கத்தினையேனும் வெற்றிகொள்ளவில்லை.
  • இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்ற மொத்த நாடுகள் 7ஆகும். அவையாவன; இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகியனவாகும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் 8 அத்தியாயங்களிலும் (1951-1978) தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை ஜப்பான் வகித்து வந்தது, ஆயினும் 1982ம் ஆண்டிலிருந்து இற்றைவரை பதக்கப் பட்டியலில் முதல் இடத்தினை சீனா தனதாக்கிக் கொண்டது.
  • பொருளாதார நெருக்கடி காரணமாக 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமுடியாது என வியட்நாம் அறிவித்ததையடுத்து, 2019ம் ஆண்டு (2018-ம் ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டது) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 1962-ல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1962ஜகார்த்தா) தங்கப்பதக்கம் வென்ற முதல் மலேசிய வீரர் DR.மணி ஜெகதீசன்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1951 புதுடில்லி) பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் மொஹமட் அக்பர். இவர் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் (3.38மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1958 டோக்கியோ) தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ஆவார். இவர் உயரம் பாய்தல் போட்டியில் (2.03மீற்றர்) தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் (1962 ஜகார்த்தா) பதக்கம் வென்ற முதல் இலங்கை வீராங்கனை நிர்மலா திசாநாயக்க. இவர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்.
 ***
Blog Widget by LinkWithin