Wednesday, February 27, 2013

பெப்ரவரி 27 - சர்வதேச துருவக் கரடி தினம்


உலக வெப்பமயமாதலின் காரணமாக ஆர்ட்டிக் துருவப் பிராந்தியங்களில் பனிக்கட்டிகள் உருகிவருகின்றன. இதன் காரணமாக இந்தப் பிராந்தியத்தினை வாழ்விடமாகக் கொண்ட துருவக் கரடிகள் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன.  இது தொடர்பிலான விழிப்புணர்வினை உலகளாவியரீதியில் ஏற்படுத்தும்முகமாக இத்தினமானது அனுஷ்டிக்கப்படுகின்றது.

துருவக் கரடிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான சில தகவல்கள் வருமாறு....! 

 துருவக் கரடியின் விஞ்ஞானப் பெயர் "Ursus Maritimus " இந்த இலத்தீன் பெயரின் அர்த்தம் "கடல் கரடி" என்பதாகும்.

 அச்சுறுத்தலினை எதிர்நோக்கியுள்ள உயிரினமாக IUCN அமையத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள துருவக் கரடிகள் பெரும்பாலும் ஆர்ட்டிக் பிராந்தியத்திலும், ஐக்கிய அமெரிக்கா(அலஸ்கா), கனடா, ரஷ்யா, கிறீன்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் பனிபடர்ந்த பிராந்தியங்களினையும் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.  உலகில் 60% ஆன துருவக் கரடிகள் கனடா நாட்டிலேயே வாழ்கின்றனவாம்.


 பாலூட்டி வர்க்கத்தினைச் சேர்ந்த துருவக் கரடிகளின் பிரதானமான உணவு சீல்கள் ஆகும். துருவக் கரடிகள் மிகச் சிறந்த மோப்ப சக்தியினைக் கொண்டவையாகும். இவை ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள சீல்களினைக்கூட தமது மோப்ப சக்தியினால் உணர்ந்து கொள்கின்றன.


 துருவக் கரடிகள் மிகச் சிறப்பாக நீந்தக்கூடியவையாகும். இவை மணித்தியாலத்திற்கு 6 மைல்கள் என்ற வேகத்தில் நீந்துகின்றன. மேலும் இவை நாளொன்றில் 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் நீந்தக்கூடியவையாம்.


 துருவக் கரடிகள் தனது ஆயுளின் அரைவாசிக்கும் அதிகமான காலப்பகுதியினை உணவினை வேட்டையாடுவதிலேயே கழிக்கின்றன. ஆனால் இதன் வேட்டையாடலில் 2% வகிபாகமே வெற்றிகரமானவையாம்.

 துருவக் கரடிகளில் புதிதாக பிறந்த குட்டிகளின் நிறை அண்ணளவாக் 1 பவுண்ட் (0.45 கிலோகிராம்) ஆகும். வளர்ச்சியடைந்த பின்னர் இவை 6–10அடி உயரம்வரை வளர்வதுடன் 400–700கிலோகிராம் பருமனினையும் அடைகின்றன.

 பருமனிலும், உயரத்திலும் ஆண் துருவக் கரடிகளுக்கும், பெண் துருவக் கரடிகளுக்குமிடையே பாரியளவிலான வேறுபாடு உண்டு. ஆண் துருவக் கரடிகள், பெண் துருவக் கரடிகளினை விடவும் 2 அல்லது 3 மடங்கு பெரியவையாகும்.

துருவக் கரடிகளின் உண்மையான நிறம் வெள்ளை இல்லை. அவை கறுப்பு நிற தோலினைக் கொண்டதுடன், நிறமற்ற முடியினையும் கொண்டவையாகும். அவற்றின் வெள்ளை நிறத் தோற்றத்திற்கு காரணம் என்னவெனில், சூரிய ஒளி அதன் உடலிலுள்ள முடியில் பட்டு பிரதிபலிப்பதனாலாகும்.

உலக வெப்பமயமாதல் காரணமாக துருவக் கரடிகளின் பிரதான் வாழிடமாக விளங்குகின்ற கடல் பனிப்பாறைகள் இழக்கப்படுதல் துருவக் கரடிகளுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இவற்றுடன் மனிதன் – துருவக் கரடிகள் மோதல், கைத்தொழில் விளைவுகள் ஆகியனவும் விளங்குகின்றன.



துருவக் கரடிகளின் முக்கியத்துவம்

ஆர்ட்டிக் பிராந்தியங்களில் ஏற்படுகின்ற சூழல் மாற்றங்களினை மதிப்பிடுவதற்கு துருவக் கரடிகள் உதவி புரிகின்றன. ஏனெனில் ஆர்ட்டிக் பிராந்தியத்தின் கடற்சூழலில் ஏற்படுகின்ற மாறுதல்களினை வெளிப்படுத்துகின்ற அபாய சமிக்ஞைகளாக துருவக் கரடிகள் விளங்குகின்றன.

♥ ஆர்ட்டிக் பிராந்தியத்தின் உணவுச் சங்கிலியின் பிரதானமானதொரு உயிரியாக துருவக் கரடிகள் விளங்குகின்றன. இதன் மூலம் ஆர்ட்டிக் பிராந்தியத்தின் ஆரோக்கியமான சுற்றுச் சூழலிற்கு அவை உதவிபுரிகின்றன.

***

Thursday, February 21, 2013

உலக மொழிகள் தொடர்பிலான சுவாரஸ்சியமான தகவல்கள்....

  பெப்ரவரி 21 – உலக தாய்மொழி தினம் 



 ண்டுதோறும் பெப்ரவரி 21-ஆம் நாள் ‘தாய்மொழி நாளாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமை போராளிகளின் நினைவாக 2000ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.



⃠  உலகளாவியரீதியில் 6500 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றனஇந்த மொழிகளில் அண்ணளவாக 2000 மொழிகள் 1000 இற்கும் குறைவான மக்கள் தொகையினராலேயே பேசப்படுகின்றது.

⃠  உலகில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினாரல் பேசப்படும் மொழிகள் 13 மாத்திரேமே ஆகும்அவையாவனமண்டேரியன் சீனம்,    ஆங்கிலம்,ஹிந்தி,ஸ்பெயின் மொழி,ரஷ்ய மொழி,அரபு,வங்காள மொழி,    போர்த்துகேய மொழி,மலாய் இந்தோனேசியாபிரெஞ்சு மொழி,ஜப்பானிய மொழி,   ஜேர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.

⃠  உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன்  சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

⃠ உலகில் ஆறு மொழிகளே பழமையான மொழிகளாகும். அவையாவன ; தமிழ் மொழி , அரபு மொழி , சீன மொழி , சமஸ்கிருத மொழி , கிரேக்க மொழி, இலத்தீன் மொழி 



⃠  உலகில் இலத்தீன் மொழியினை உத்தியோகபூர்வ மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.

⃠  உலகில் நெடுங்கணக்கில் அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழி கம்போடிய கெமர் மொழியாகும். 74 எழுத்துக்களை கெமர் மொழி கொண்டிருக்கின்றது.


⃠  உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும்.
பசுபிக் சமுத்திரத்தின் தென்மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.


 ⃠  ஆபிரிக்காவில் 2000 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
 இதில் 80% ஆன மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை.


⃠  உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றதாம்.

****

Sunday, February 10, 2013

உலகளாவியரீதியிலான சில திருமண பாரம்பரியங்கள்....!

பெப்ரவரி, 2வது ஞாயிற்றுக்கிழமை - உலக திருமண தினம்

உலக திருமண தினமானது 1986ம் ஆண்டிலிருந்து, பெப்ரவரி மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படுகின்றது.

இந்த வருட உலக திருமண தினம் இன்றாகும்.(2013/02/10)

அந்த வகையில், உலகளாவியரீதியிலான சில திருமண பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக.

۞۞ மொங்கோலிய நாட்டில் "டாவூர்" இன குழும மக்கள் திருமண திகதியை நிச்சயிப்பதற்காக வித்தியாசமானதொரு பாரம்பரிய முறையினை கைக்கொள்கின்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் கோழியொன்றினைக் கொலை வேண்டும். பின்னர் அவர்கள், உயிரற்ற கோழியின் உடற்பாகத்தினை வெட்டி அதன் ஈரலினை பரிசோதிக்க வேண்டும். அந்த ஈரல் ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்குமானால் தம்பதிகளின் திருமணத் திகதி அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லையேல், ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் உள்ள கோழி ஈரலினை கண்டுபிடிக்கும்வரை அவர்கள் இந்த செயற்பாட்டினை மீண்டும் செய்ய வேண்டுமாம்.

۞۞ கொங்கோ நாட்டில் நடைபெறும் பாரம்பரிய திருமணங்களில் கலந்துகொள்ள நகைச்சுவையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில், திருமண வைபவம் தொடங்கியதிலிருந்து முடிவடையும் வரை மணமகன், மணமகள் ஆகியோர் சிரிப்பதற்கு அனுமதியில்லையாம்.

۞۞ குண்டாகுங்கள் இல்லையேல் திருமணம் இல்லை.


நைஜீரிய நாட்டில் "எஃபிக்" இனக் குழும இளம்பெண்கள் பூப்படைந்த பின்னர், அங்கே வயதான பெண்களினால் பராமரிக்கப்படும் "கொழுக்கும் இல்லங்களில்" நுழைந்துகொள்கின்றனராம். அவர்கள் பெரும்பாலும் தமது நேரத்தினை தொடர்ச்சியாக உண்பதிலேயே செலவிடுகின்றனராம். பின்னர் அவர்கள் அதிபார நிலையினை அடைந்த பின்னர், திருமணத்திற்கு பூரண தகுதியுடையவர்கள் என்ற நிலையினை அடைந்தவர்களாக கருதப்படுகின்றார்கள்.

۞۞ சீனா நாட்டில் நடைபெறுகின்ற பாரம்பரிய திருமண வைபங்களில் சிவப்பு நிறமே பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில், சிவப்பு நிறமானது காதல், சந்தோசம், வெற்றி ஆகியவற்றினை குறிக்கின்றது. மேலும், திருமண நாளில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வீடுகளும் சிவப்பு நிறத்திலே அலங்கரிக்கப்படுகின்றதாம்.


۞۞ செக் குடியரசில் புதுமணத் தம்பதிகளை அரிசிக்குப் பதிலீடாக பட்டாணிகளாலேயே ஆசீர்வதிக்கின்றனராம்.

۞۞ மொரோக்கோ நாட்டுப் பெண்கள், தன் தூய்மை தன்மைக்காக  திருமண வைபத்திற்கு தயார்படுத்துவதற்கு முன்னர் பால் குளியலை மேற்கொள்கின்றனராம்.

۞۞ இந்துக்களின் பாரம்பரியத்தில்; திருமண நாளில் மழை பெய்வது நல் அதிர்ஷ்டமாகுமாம் என்ற நம்பிக்கையுண்டு. 



۞۞ "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க"...!

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது.
அந்த பதினாறு செல்வங்களும் வருமாறு;

கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு.


***

Thursday, February 7, 2013

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் டெஸ்ட் | சாதனைகள்

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையில் ஜோகனஸ்பேர்க்கில் நடைபெற்ற 1வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை நாம் அறிந்த தகவலே.

இப்போட்டியில் நிகழ்ந்தப்பட்ட உலக சாதனைகள் சில வருமாறு...

►◄ இப்போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி  இன்னிங்ஸ் ஒன்றில் மிகக்குறைந்த ஓட்டங்களினைப் பதிவுசெய்து கொண்டது.
29.1 ஓவர்களினை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணியானது 49 ஓட்டங்களுக்குள் சுருண்டுகொண்டது. பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களினை வீழ்த்தினார்.

இதற்கு முன்னர், 2002 ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சார்ஜாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 53 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பாகிஸ்தான் அணி பெற்ற மிகக்குறைந்த டெஸ்ட் ஓட்டங்களாகும்.

பாகிஸ்தான் அணி பெற்ற 49 ஓட்டங்களானது ஒரு அணி தென்னாபிரிக்க அணிக்கெதிராக பெற்ற 3வது மிகக்குறைந்த டெஸ்ட் ஓட்டங்களாகும். இதற்கு முன்னர் 2013 ஜனவரியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களிலும், 2011 நவம்பரில் அவுஸ்திரேலிய அணி 47 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தன.

►◄ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் போட்டியில் ஒன்றில் அதிக பிடிகளை (11) எடுத்த விக்கட் காப்பாளராக விளங்கிய இங்கிலாந்து அணியின் ஜக் ரஸ்சல் அவர்களின் 14 வருட கால உலக சாதனையினை (எதிர் தென்னாபிரிக்கா)  தென்னாபிரிக்க அணியின் டி வில்லியர்ஸ் சமன் செய்துகொண்டார். டி வில்லியர்ஸ், 1வது இன்னிங்ஸ்சில் 06 பிடிகளினையும், 2வது இன்னிங்ஸ்சில் 05 பிடிகளினையும் எடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



மேலும், இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஆட்டமிழப்புகளை (06)  மேற்கொண்ட தென்னாபிரிக்க விக்கட்காப்பாளர்களில் ஒருவராக  டி வில்லியர்ஸ் தனது பெயரினை மார்க் பவுச்சர் & டேவ் ரிச்சர்ட் (03தடவைகள்) ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார்.

►◄ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒற்றை இலக்க ஓட்டத்தினை மாத்திரம் வழங்கி 6விக்கட்களை வீழ்த்தி சிறப்புப் பெறுதியைப் பெற்ற 3வது வீரராக டேல் ஸ்டெய்ன் சாதனை படைத்தார்.


√ ஜெரமி லோஷன்  - மே.தீவுகள் எதிர் பங்களாதேஷ், 6. 5-4-3-6, டாக்கா, 2002 டிசம்பர்

√ ஓர்த்தர் கில்லிகன் - இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா, 6.3-4-7-6, பிர்மிங்காம், 1924 ஜூன்

√ டேல் ஸ்டெய்ன் - தென்னாபிரிக்கா எதிர் பாகிஸ்தான், 8.1-6-8-6, ஜொஹனஸ்பேர்க், 2013 பெப்ரவரி


√ மைக்கல் கிளார்க் - அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, 6.2-0-9-6, மும்பாய்,  2004 நவம்பர்

►◄ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 100 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய ஒரேவீரராக தென்னாபிரிக்க அணியின் கிரேம் ஸ்மித் சாதனை படைத்தார்.


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய அணித்தலைவர்கள்...!

√ கிரேம் ஸ்மித் (தென்னாபிரிக்கா) - 100+ போட்டிகள் (வெற்றி - 48, தோல்வி - 26, வெற்றிதோல்வியின்மை - 26)



√ அலன் போடர் (அவுஸ்திரேலியா) - 93 போட்டிகள் (வெற்றி - 32, தோல்வி -22, வெற்றிதோல்வியின்மை - 3, சமநிலை - 01)

√ ஸ்ரிபன் ப்ளெமிங் (நியூசிலாந்து) - 80 போட்டிகள் (வெற்றி - 28, தோல்வி - 27, வெற்றிதோல்வியின்மை - 25)

√ ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா) - 77 போட்டிகள் (வெற்றி - 48, தோல்வி - 16, வெற்றிதோல்வியின்மை - 13)

√ கிளைவ் லொயிட் (மே.தீவுகள்) - 74 போட்டிகள் (வெற்றி - 36, தோல்வி - 12, வெற்றிதோல்வியின்மை - 26)

***
Blog Widget by LinkWithin