Sunday, September 23, 2012

அறிவுச் சுரங்கம்........


சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக.......

Ø  உலகில், கண்டங்களுக்கிடையிலான மிகக்குறைந்த நேர அளவினைக்கொண்ட வணிக விமானப் பறப்பு இடம்பெறுவது ஐரோப்பாவின் ஜிப்ரொல்ருர் மற்றும் ஆபிரிக்காவின் ரான்ஜிர் இடையிலாகும். 34 மைல்கள் தூரம், 20 நிமிட நேர விமானப் பறப்பு.

Ø  உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமானது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சைல் நகரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2444 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.



Ø  புவியின் உபகோளாகிய சந்திரன் வருடாந்தம் 1.5 அங்குலங்கள் புவியிருந்து விலகிக்செல்கின்றதாம்.

Ø  ஒலியானது வளியில் செக்கனுக்கு 331 மீற்றர்கள்(740 mph) பயணம் செய்யும். ஆனால், 20ºC அறை வெப்ப நிலையில் ஒலியானது செக்கனுக்கு 343 மீற்றர்கள்(767 mph) பயணம் செய்யும்.

Ø  ஹங்கேரி நாட்டின் தலைநகரமாக புடாபெஸ்ட் விளங்குகின்றது. உண்மையில் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இரண்டு நகரங்களின் கூட்டிணைவே இவையாகும்.ஆரம்பத்தில் ஒன்றாகக் காணப்பட்ட  நகரினை டன்யூப் நதியானது இரண்டாக பிரித்துவிட்டது.



குறிப்பு - வொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும். வியன்னா, பெல்கிரேட், புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் டன்யூப் நதிக்கரையிலே அமைந்துள்ளன.

*            அமெரிக்காவின் பிரதான மாநிலங்களில் ஒன்றாக புளோரிடா விளங்குகின்றது. ஸ்பெய்னிடமிருந்து, 1819ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தை 5மில்லியன்              டொலர்களுக்கு அமெரிக்கா கொள்வனவு செய்தது.

***

Saturday, September 22, 2012

உலகில் மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை



உலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலையானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள்ளது. இந்த திருவுருவச்சிலையானது "சின்மயா கணபதி" என்றழைக்கப்படுகின்றது. 24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்டதாகும். 800 மெற்றிக் தொன் நிறையினைக் கொண்ட இச்சிலையினை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2001ம் ஆண்டு சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு இச்சிலை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

****************************************************

***

Saturday, September 15, 2012

ஆபிரஹாம் லிங்கன் ~ தோல்விகளால் துவண்டு போகாதவர்....




ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனநாயக முறையின் கலங்கரை விளக்காக விளங்கி அமெரிக்காவில் அடிமை வியாபாரத்தினை ஒழிக்கும் முயற்சியில் தன் உயிரை அர்ப்பணித்தவர். வறுமை காரணமாக  பாடசாலை செல்லமுடியாது தந்தையின் தச்சுப்பட்டறையில் துணைபுரிந்தார். பலமைல்கள் தூரம் நடந்து சென்று கடன் வாங்கிப் புத்தகங்களைப் படித்தார். பின்பு சட்டம் பயின்று சாதாரண வழக்கறிஞர் ஆனார்.

தன் வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தினை பல்வேறு தோல்விகளைக் கடந்து 1860ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர்.

ஆபிரஹாம் லிங்கன் வெள்ளை மாளிகையை அடைய கடந்துவந்த பாதை.....

Ø  1816 ~ ஆபிரஹாம் லிங்கனின் குடும்பத்தினர் அவர்கள் பாரம்பரியமாக குடியிருந்த வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தன் குடும்பத்திற்கு உதவு புரியுமுகமாக வேலைக்கு செல்ல நேர்ந்தது.  

Ø  1818 ~ ஆபிரஹாம் லிங்கனின் தாயார் மரணம்

Ø  1831 ~ வியாபாரத்தில் தோல்வி

Ø  1832 ~ சட்டசபை தேர்தல் தோல்வி

Ø  1832 ~ சட்டக்கல்லூரி செல்வதற்காக தனது தொழிலினை இழந்தார், ஆனாலும் சட்டக்கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.

Ø  1833 ~ வியாபாரத்தில் தோல்வி

Ø  1834 ~ சட்டசபைத் தேர்தல் தோல்வி

Ø  1835 ~ பிரஹாம் லிங்கன் மணம்முடிக்கவிருந்த அவனது காதலி மரணம்

Ø  1836 ~ நரம்புக் கோளாறு நோய் பாதிப்பினால் 6 மாதங்கள் படுக்கையிலேயே காலத்தினைப் போக்கினார்

Ø  1838 ~ சட்டசபை சபாநாயகர் தேர்தல் தோல்வி

Ø  1840 ~ எலக்டர் தேர்தல் தோல்வி

Ø  1843 ~ காங்கிரஸ் தேர்தல் தோல்வி

Ø  1846 ~ காங்கிரஸ் தேர்தல் வெற்றி; வாசிங்டன் சென்று நல்லதொரு வேலையில் இணைந்துகொண்டார். 

Ø  1848 ~ காங்கிரஸ் மீள் தேர்தல் தோல்வி

Ø  1849 ~ தன் சொந்த மாநிலத்தில் காணி அதிகாரி பதவியில் இணைய விண்ணப்பித்தார்; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

Ø  1854 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி

Ø  1856 ~ உப ஜனாதிபதி தேர்தல் தோல்வி

Ø  1858 ~ செனெட்சபை தேர்தல் தோல்வி

Ø  1860 ~ ஜனாதிபதி தேர்தல் வெற்றி     

***

Sunday, September 9, 2012

உலகில் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை

உலகில் மிகவும் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை உலகிலுள்ள ஒரே இந்துமத நாடாகிய நேபாள நாட்டின் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. 143அடி உயரமுடைய இந்த திருவுருவச் சிலையானது 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.



நேபாள நாட்டின் வக்ராபுர் மாவட்டத்தில் , கைலாஷ்குட் மலையில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலைக்கான எண்ணக் கருவினை வடிவமைத்தவர் இந்திய பொறியியலாளர் மதுரம் வர்மா ஆவார். இந்த திருவுருவச் சிலைக்கான நிதி உதவியினை வழங்கியவர் நேபாள நாட்டில் வதியும் இந்தியரான கமல் ஜெயின் என்பவராவார்.

♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪

அறிந்து கொள்வோம் -*- 

பிரம்பணன் என்றழைக்கப்படுகின்ற புராதன இந்து ஆலயமானது இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது. கிபி 850 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றினை உடைய இந்த ஆலயமானது 8 பிரதான கோவில்களையும், அதனை சுற்றி 250 சிறிய கோவில்களையும் கொண்டமைந்துள்ளது.





இந்த ஆலயத்தின் பெரும்பாலான சுவர்கள் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அவதாரங்கள் , ஆஞ்சநேயரின் சாகசங்கள் , இராமாயண காப்பிய அம்சங்களினையும், ஏனைய புராதன கதைகளினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.


***

Saturday, September 8, 2012

உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள்....



ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும்.  தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.
அந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;

நண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...

Ø  இங்கிலாந்து  நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.



Ø  கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.

Ø  சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் "கடிகாரம்" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல  நிறங்களினை உபயோகிப்பதில்லை.

Ø  இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.

Ø  வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது "டெட் புத்தாண்டு(Tet)" ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.

Ø  உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.

Ø  உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.

Ø  பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.

Ø  ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.

Ø  ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.

Ø  ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.

Ø  "ஹெப்பி பேர்த் டே" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.
                
***
Blog Widget by LinkWithin