Wednesday, February 23, 2011

பெயர் வரக் காரணம் என்ன?..... # 04




பொலிஸ்காரரை ஆங்கிலத்தில் "கொன்ஸ்டபிள்" (Constable) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?....... இந்த கொன்ஸ்டபிள் என்ற வார்த்தை இலத்தீன் மொழியான "கொம்ஸ் ஸ்டபுளி" என்ற சொல்லிருந்து உருவானது.

"கொம்ஸ் ஸ்டபுளி" என்றால் குதிரை இலாயத்திலுள்ள குதிரைகளினை எண்ணுபவர் என்று அர்த்தமாம்.


+-+-+-+^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^+-+-+-+


உங்களுக்குத் தெரியுமா?.....

* சதுர வடிவ தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்யும் நாடு....



தர்ப்பூசணிகள் வழமையில் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் ஜப்பான் நாட்டில் சதுர வடிவிலேயே தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்றால், சதுர வடிவிலான கண்ணாடி பெட்டிகளில் தர்ப்பூசணிகளினை வளர்ப்பதன் மூலமாகும். சதுர வடிவிலான தர்ப்பூசணிகளினை குளிர்சாதனப் பெட்டிகளில் இலகுவாக வைக்கக்கூடியதாக இருப்பதுடன், அவற்றுள் அதிக பொருட்களினையும் உள்ளடக்க முடியும்.

ஜப்பானில் சதுர வடிவ தர்ப்பூசணிகளின் விலையானது($82), வழமையான வட்ட வடிவிலான தர்ப்பூசணிகளின் விலையினை($15-20 ) விடவும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


***

Monday, February 21, 2011

உலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய்.....




உலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய் என்கின்ற பெருமையினை 7வயது நிரம்பிய "மொமோ" [Momo] என்கின்ற செல்லப் பெயரினை உடைய Chihuahua வகையினைச் சேர்ந்த பெண் நாய் பெறுகின்றது.

மேற்கு ஜப்பான், கொரியாமாவில் நடைபெற்ற நாரா(Nara) பொலிஸ் நாய் தேர்வின்போதே 6 பவுண்ட்(2.72கிலோகிராம்) மாத்திரம் நிறையினை உடைய "மொமோ"விற்கு இந்த அதிர்ஷ்டவாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக தேடுதல் மற்றும் மற்றும் மீட்புப் பணியில் Golden Retrievers மற்றும் ஜேர்மன் Shepherds வகையினைச் சேர்ந்த நாய்களே ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பூகம்பங்கள், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது "மொமோ", தேடுதல் மற்றும் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுமென பொலிஸ் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

"மொமோ" என்றால் ஜப்பானிய மொழியில் அழகிய இளம் பெண் என அர்த்தமாகும்.

நாய்களில் Chihuahua வகை நாய்களே உருவத்தில் சிறிய நாய்களாகும். Chihuahua என்றால் என்ன தெரியுமா... Chihuahua என்பது மெக்ஸிக்கோ நாட்டின் மாநிலங்களில் ஒன்றாகும். 19ம் நூற்றாண்டின் மத்தியில் Chihuahua மாநிலத்திலேயே முதன்முதலில் இந்த வகை நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிஸ் மோப்ப நாய் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதலாவது Chihuahua இன நாய் "மொமோ" ஆகும்.


***

Thursday, February 17, 2011

பழமை வாய்ந்த இந்துக்கோயிலுக்கு ஆபத்து....




தாய்லாந்து, கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக நம்பப்படுகின்ற 1722 அடி உயரத்தில் அமைந்துள்ள "ப்ரிஹ் விஹார்" என்றழைக்கப்படும் "சிகரேஷ்வரர்" சிவன் கோயில் தொடர்பாக அண்மைய நாட்களில் இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.

நீண்ட காலமாக இந்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் இந்த ஆலயம் தொடர்பாக, பல்வேறு காலகட்டங்களில் தாய்லாந்து தேசமும், கம்போடியா தேசமும் மாறி மாறி உரிமை கொண்டாடி வந்ததுடன் தமக்கிடையே யுத்தங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.




இதன் காரணத்தினால் இந்தப்பிரச்சினையினை விசாரணை செய்த நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம், 1962ம் ஆண்டு ஆலயமும், சுற்றுப்புறமும் கம்போடியா நாட்டுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கி தீர்த்துவைத்தது. 1908ம் ஆண்டு கம்போடிய நாட்டினை ஆட்சி செய்த பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் இந்தப்பகுதியினை கம்போடியாவின் ஒரு பகுதியாகவே குறித்துக்காட்டியிருந்தனர். இந்த வரைபடமானது வலுவானது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பிரகாரம் தாய்லாந்து நாடானது ஆலயத்தினை கம்போடியாவிடம் ஒப்படைத்தது.

ஆனால் இத்தீர்ப்பில், ஆலயத்தினை அண்டியுள்ள 1.8 சதுரமைல் பரப்பளவான பிரதேசம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என சரியாக வரையறை செய்யப்படவில்லை.

கம்போடியாவிலிருந்து இந்த ஆலயத்துக்கு செல்லவேண்டுமாயின் அந்த நிலப்பரப்பின் வழியாகவே செல்லவேண்டும். அந்தப்பகுதி தனக்கே சொந்தமானது என தாய்லாந்து உரிமை கோருகின்றது. இதன் காரணத்தினாலேயே இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.

ஆனால், பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் 1.8 சதுரமைல் காட்டுப்பிரதேசம் கம்போடியாவுக்கு சொந்தமானதாகவே குறித்துக்காட்டப்பட்டுள்ளதாம்.



900ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்துக்கு உலக மரபுரிமை இடமாக 2008ம் ஆண்டு ஜூலை, ஐ.நா யுனெஸ்கோ அமையமானது அங்கீகாரம் வழங்கியது.

இரண்டு நாடுகளும் தமக்கிடையேயான பேதங்களைக் கைவிட்டு உலக பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த சிவன் கோயிலினை அழிவிலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.


***

Tuesday, February 15, 2011

மூங்கில் சைக்கிள்கள்......




உலகில்,பொதுவாக இரும்பினாலான சைக்கிள்களே பாவனையிலுள்ளன என்பது நாம் அறிந்த தகவலே. ஆனால் மூங்கில் சைக்கிள்கள் ஆபிரிக்க நாடொன்றில் மிகப்பிரபல்யம் பெற்றுவருகின்றன என்பது ஆச்சரியமான தகவலாகும். ஆம்.... அந்த ஆபிரிக்க நாடு எது தெரியுமா?.... கானா தேசம்தான்...



இரும்பு சைக்கிள்களிலே பயணம்செய்து பழக்கப்பட்ட நமக்கு மூங்கில் சைக்கிள்களில் பயணம்செய்வது ஒரு புதுவித அனுபவம்தான்.


++++++++++++++++-----------++++++++++++++++--


கார்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்

 1886ம் ஆண்டு ஜனவரி மாதம், 29ம் திகதி உலகத்தையே மாற்றியமைத்த நாளாகக் கருதப்படுகிறது. 125 வருடங்களுக்கு முன் ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த கார்ள் பென்ஸ் உலகின் முதல் மோட்டார் வாகனத்தைப் புதிதாக கண்டுபிடித்ததற்கான தனது பட்டயத்தை இத்தினத்திலேயே சமர்ப்பித்தார்.






உலகில் மோட்டார் வாகன தயாரிப்பு தொழிற்துறையில் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த ஹென்ரி போர்ட் சிறப்பிடம் வகிக்கின்றார். ஹென்ரி போர்ட், ஆரம்ப காலங்களில் Model T Fords மோட்டார் வாகனங்கள் அதிகளவில் கறுப்பு நிறங்களிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் கிடைத்த வர்ணங்களில் கறுப்பு நிறமே மிகவிரைவில் உலரும் தன்மையினை கொண்டிருந்ததனாலாகும்.

***

Sunday, February 13, 2011

அழகான & ஆபத்தான சிங்கமீன்கள்(Lionfish).........




பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகும் காட்சியளிக்கும் சிவப்பு சிங்கமீன்கள்(Red Lionfish) இதுவரையும் மனிதர்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்துவதாக அறியப்பட்டிருந்தன. ஆனால் இந்த மீனினங்கள் மனிதர்களுக்கு மாத்திரமின்றி அவை வாழுகின்ற இயற்கை சூழற்றொகுதிக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.


ஒரு சிங்க மீனானது, முருகைக்கற் சூழற்றொகுதியொன்றில் அறிமுகமாகின்றபோது, அவை அறிமுகமாகிய ஒரு சில வாரங்களிலேயே அந்த முருகைக்கற் சூழற்றொகுதியில் வாழ்கின்ற சிறிய மீனினங்களில் 80% ஆனவை அழிவடைந்துபோவதாக அமெரிக்க நாட்டினைச் ஒரிகொன் மாநில பல்கலைக்கழக கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் சிங்க மீனினங்கள் உயர்ந்தபட்சத்தில் ஏனைய உயிரினங்களை வேட்டையாடும் தன்மை கொண்டவையாகும்.

மேற்கு பசுபிக் கடலின் சுதேச நீர்ப்பரப்புகளின் சூழற்றொகுதிகள் சிங்க மீனினங்களின் வாழிடமாக விளகுகின்றன, இந்த சூழற்றொகுதிகள், சிங்க மீனினங்கள் ஏனைய உயிரினங்களை தின்கின்ற நடத்தையின் காரணமாக தம்மை மாற்றிக்கொண்டுள்ளன.

இந்த மீனினங்கள் இனப்பெருக்கம் செய்து மிகவிரைவாக பல்கிப்பெருகுவதுடன், இவை வாழ்கின்ற சூழலின் வெளியே இவற்றினை உணவாக்கிக்கொள்ள எதிரிகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய ஆண்டுகளில், இந்த மீனினங்கள் அவற்றின் வழமையான சுதேச வாழிடங்களினை விடவும் மேலும் சில பிராந்தியங்களில் அதாவது கரீபியன், தென் அமெரிக்க முருகைக்கற் சூழற்றொகுதியில் பாரியளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

இந்த மீன்களின் அறிமுகமானது கரீபியன் பிராந்திய முருகைக்கற் சூழற்தொகுதியில் புதுமையினை , விந்தையினை ஏற்படுத்திவிடக்கூடும். இது சுற்றுலாத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும்.

இதனால் மெக்சிக்கோ, பெலிஸ் போன்ற சில நாடுகள் சுழியோடிகளுக்கு, பிடிக்கின்ற மீன்களின் தொகைக்கேற்ப பணத்தினை வழங்கி இவற்றினை கட்டுப்படுத்த முனைகின்றன. ஆனாலும் இவை பாரியளவில் காணப்படுகின்றன என்பது சுழியோடிகளுக்கு வழங்கப்படுகின்ற பணத்தொகையிலிருந்து புலப்படுகின்றனது என்பது கவலைதரும் செய்தியாகும். பாரம்பரிய மீன்பிடிமுறைகளான வலைகளைப் பயன்படுத்தி இவற்றினை கட்டுப்படுத்தமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் சில பகுதிகளில் மிகப்பிரபலமான உணவாக இந்த மீனினங்கள் விளங்கினாலும், அலங்கார மீன் தொழிற்துறையில் மிக அதிகமான விலை கொண்ட மீனினமாகவும் இந்த மீனினங்கள் விளங்குகின்றன.

கடல் சூழற்றொகுதிகளினை பாதுகாப்பதற்காக இந்த மீனினங்களை அதிகளவில் உணவாக்கிகொள்ள மக்களுக்கு விஞ்ஞானிகள் அழைப்புவிடுகின்றனர்.


Lionfish தொடர்பான பொதுவான தகவல்கள்

ஸ்கோப்பியன் மீன் குடும்பத்தினைச் சேர்ந்த இந்த மீனினங்களின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் ~ 5-10 ஆண்டுகள் ஆகும். அத்துடன் இந்த மீனினங்கள் 15 அங்குலங்கள் வரை வளரக்கூடியவை.

இந்த மீனினங்கள் வெளிப்புறமாக ஊசி போன்ற முற்கள் 18இனைக் கொண்டுள்ளன. இவை அதிக விஷமுடையவை ஆகும்.

இந்த மீனினங்கள் தனது ஊசி போன்ற முற்களால் மனிதனை தாக்குகின்றபோது மிகக் கடுமையான வலிகள் ஏற்படுத்துவதுடன், வாந்தி, சுவாசப்பிரச்சினைகள், பாரிச வாதம் அத்துடன் அரிதாக மரணத்தினையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

***

Tuesday, February 8, 2011

சனத்தொகையில் விஞ்சிச்செல்கின்ற பங்களாதேஷ்...



உலகில், வறிய நாடுகளில் ஒன்றாகவும் அதேவேளை அதிகளவில் சனத்தொகையினை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் பங்களாதேஷ் நாடானது விளங்குகின்றது.

தெற்காசிய நாடாகிய பங்களாதேஷ் நாட்டின் பரப்பளவானது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஐடாஹோ மாநிலத்தின் பரப்பளவினை ஒத்ததாகும். பங்களாதேஷ் நாட்டின் பரப்பளவு 144,000 சதுரகிலோமீற்றர்களாகும்.

பங்களாதேஷ் நாடானது நிலப்பரப்பின் அடிப்படையில் 93வது இடத்தினை வகிக்கின்ற அதேவேளை சனத்தொகையின் அடிப்படையில் 7வது இடத்தினை வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பங்களாதேஷ் நாட்டின் மொத்த சனத்தொகை 155மில்லியனிலும் அதிகமாகும். அதேவேளை உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நாடுகளின் வரிசையில், ரஷ்யா முதலிடம் பெற்றாலும் சனத்தொகையின் அடிப்படையில் பங்களாதேஷ் நாட்டினை விடவும் பின்னாடியே காணப்படுகின்றது. சனத்தொகையின் அடிப்படையில் ரஷ்யா 9வது இடத்தினையே வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1000சதுரகிலோமீற்றருக்கும் மேற்பட்ட பரப்பினை கொண்ட நாடுகளிடையே அதிக அடர்த்தியில் சனத்தொகையினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பங்களாதேஷ் விளங்குகின்றது. அதாவது ஒரு சதுரகிலோமீற்றருக்கு 1075 மக்கள் வீதமாகும்.


***

Sunday, February 6, 2011

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இறால்கள்...



உலகில் மிகப்பிரபலமான உணவுகளில் இறால் உணவுகளும் உள்ளடங்குகின்றன. இறால்களினை எமது உணவுகளில் சேர்த்துக்கொள்வதனால் எம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். அவையாவன,

இறால்களில் சிலீனீயும் எனப்படும் ஒட்சிசனெதிரி, மற்றும் புரதச்சத்துக்கள், விற்றமின்களான B12 மற்றும் D ஆகியவையும் இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ், நாகம், செம்பு ஆகிய மூலகங்களும், ஒமேகா~3 கொழுப்பு எண்ணெய் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.

இறால்களில் கொலஸ்ரோல் மட்டங்கள் குறிப்பிடத்தக்களவில் குறைவாகவே காணப்படுகின்றது. இறால்களில் உள்ள கொழுப்பு எண்ணெய்கள் சிறந்த கொலஸ்ரோலின் உருவாக்கத்திற்கு உந்துசக்தி அளிக்கின்றது.

இறால்களில் மிகக்குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளதனால் உடல் நிறையினை கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது.

இறால்களில் ஒமேகா~3 அதிகளவில் காணப்படுகின்றது. ஒமேகா~3 ஆனது உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்படுதற்கும் உதவுகின்ற அதேவேளை இரத்தச் சுற்றோட்ட பிரச்சினைகளுக்கான ஆபத்தினை குறைப்பதற்கும் உதவிபுரிகின்றது.

இறால்களில் உள்ள விற்றமின் D ஆனது கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் ஆகியவற்றின் உட்கிரகித்தலினை ஒழுங்குபடுத்துகின்றது. இவை வலிமையான எலும்புகளுக்கும், பற்களுக்கும் முக்கியமானவையாகும்.

விற்றமின் B12 ஆனது மூளையின் தொழிற்பாடு ஒழுங்காக நடைபெறுவதற்கும், இரத்த கலங்கள் உருவாகுவதற்கும் அத்தியாவசியமானவையாகும்.

இறால்களில் உள்ள சிலீனீயும் ஒட்சிசனெதிரி, புற்று நோய்கள் மற்றும் ஏனைய கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.

இறால்களில் அதிகளவில் உள்ளடங்கியுள்ள Tryptophan அமினோ அமிலங்கள் ஓய்வு, நித்திரைக்கு உதவிபுரிகின்றது. Tryptophan குறைவடைவதலானது மனிதர்களில் நித்திரை, ஞாபகம், உற்சாகம் ஆகியவற்றில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.(serotonin மட்டங்கள் குறைவடைவதனாலாகும்)

***

Thursday, February 3, 2011

அன்னைக்கு கெளரவம்.....!!!



நலிவுற்றோருக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து சேவையாற்றிய அன்னை தெரேசாவுக்கு, அமெரிக்க தபால் சேவைகள் ஞாபகார்த்த தபால் முத்திரையினை(44சதம்) வெளியிட்டு கெளரவப்படுத்தியது.

2010ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் அன்னை தெரேசாவின் 13ம் ஆண்டு சிரார்த்த தினத்தினை முன்னிட்டு விருது பெற்ற ஓவியக் கலைஞர் தோமஸ் ப்ளக்‌ஷெர் II அவர்களினால் இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1996ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்கா அன்னை தெரேசாவுக்கு கெளரவ அமெரிக்க பிரஜாவுரிமை வழங்கி கெளரவப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு அன்னை தெரேசாவுக்கு வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.


++++++++++++++++++++++++++++++++++++++


இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்.....

தற்பொழுது, கிழக்கிலங்கை மட்டுமின்றி நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீரற்ற காலநிலை மேலும் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கிலங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த அடைமழை மீண்டும் ஆரம்பித்து பல நாட்களாக தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்ற அடைமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.

கடந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக பூச்சி தாக்கங்கள், யானைகளின் தொல்லைகளினால் பாதிப்படைந்த விவசாயிகள் மீண்டும் தொடர்ந்துபெய்கின்ற அடைமழையினால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளனர்.

15 வருடங்களின் பின் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சேனாநாயக்க சமுத்திரம் 110 அடி வரை நீரை கொள்ளக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மலேசியா, அவுஸ்திரேலியாவிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. பெரும் வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஜசி சூறாவளி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகத்தினை தொடர்ந்து அச்சுறுத்துகின்ற இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற பிரச்சினைகள் பாரதூரமானவையாகும்.

"காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" என்கின்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகிய எனது ஆக்கத்தினை உங்களுடன் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.



(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)

***
Blog Widget by LinkWithin