Monday, December 26, 2011

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாமி.....

இந்தியப் பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.நில அமைப்புக்கள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்ஃபீல்டு ஆராய்ச்சி செய்துவருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பதுபோல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய "டிரயாசிக்" காலத்தின் போது "லாரேசியா", "கோண்டுவானா" என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன. "டேதிஸ்" கடலால் அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த "டேதிஸ்" கடலில் இருந்து எழுந்த ஆழிப்பேரலை, "குரியுல்" கணவாய் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கின்றது. "டேதிஸ்" கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்தியப் பெருங்கடலாக மாறியது.காஷ்மீரின், "குரியுல்" பள்ளத்தாக்கு பகுதியில் இவை தொடர்பிலான பல்வேறு படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி கடற்கோள் வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டுமென பேராசிரியர் ப்ரூக்ஃபீல்டு தெரிவித்தார்.

------------------------------------------------------------

உங்களுக்குத் தெரியுமா?.....

 உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1985ம் ஆண்டு லிதுயாபேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524மீற்றர்(1742அடி)

 இதுபோன்ற இரண்டாவது உயரமான சுனாமி அலை 1963ம் ஆண்டு வெஜோன்டாமில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 250மீற்றர்(750அடி)

-------------------------------------------------------------

இன்றும் என் மனக்கண் முன்னால்........!!!2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளினைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப்பேரலையினை நம்மால் எளிதில் மறந்துவிடமுடியாது.

கடற்கரையோரங்களில் வீற்றிருந்த தென்னை மரங்களின் உயரத்திற்கும் மேலாக மேலெழுந்த ஆழிப்பேரலைகள் கரையோரங்களினைத் தாக்கிய துவம்சம் செய்தது, அந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தினை சில கிலோமீற்றர் தூரத்திலிருந்து நேரடியாகப் பார்த்தது இன்றும் என் நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.


-----------------------------------------------------

புதியதொரு மைல்கல்லினை நோக்கி..........!!!பதிவுலகில் மீண்டுமொரு மைல்கல்லினை கடக்க காத்திருக்கின்றேன். ஆம்..... எதிர்வருகின்ற பதிவு எனது 300வது பதிவாகும் என்கின்ற நற்செய்தியுடன்
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக......


***

Sunday, December 11, 2011

வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கிய டாக்டர் ராதா கிருஷ்ணன்......

உலகில் நிற பேதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போராடியிருக்கின்றார்கள். இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திற்கு அடுத்து இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்தவர் டாக்டர் ராதா கிருஷ்ணன். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளாகிய செப்டெம்பர் மாதம் 5ம் திகதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.அந்தவகையில் , டாக்டர் ராதா கிருஷ்ணன், எவ்வாறு வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கினார் என்பதற்கு சான்றாக இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம். இந்த மாமேதை, இந்தியர்களைக் கிண்டல் செய்யும் மேல் நாட்டவரை, குறிப்பாக ஐரோப்பியரை, தனது புத்தி சாதுரியத்தால் மூக்கை உடைப்பதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது.

ஒரு சமயம் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது ஆங்கிலேயர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அது வரவேற்பு நிகழ்ச்சி என்றாலும் இந்தியரான டாக்டர் ராதாகிருஷ்ணனை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்பது அந்த வெள்ளையரது குறிக்கோளாக இருந்தது.

அவர் பேசும்பொழுது, “ இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவர்கள், ஐரோப்பியரான நாம்தான். அதனால்தான் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களையும்விட, ஐரோப்பியர்களாகிய நம்மை வெள்ளை நிறத்தில் படைத்திருக்கின்றான்” என்று டாக்டர் ராதாகிருஷ்ணனை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறிப்பிட்டார்.

அவரது தலைக்கனம் மிகுந்த பேச்சைக் கவனித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்த வெள்ளையரின் மூக்கை உடைத்து, மற்ற நிறத்தவர்மேல் அவர் கொண்டிருப்பது மிகவும் தவறான அபிப்பிராயம் என்பதை உணர்த்த தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

அந்தத் தருணம் வந்தது, டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே சற்று முன்பு பேசிய அன்புச் சகோதரர், இறைவனின் படைப்பில் வெள்ளை நிறத்தின் மேன்மையை பற்றிக் குறிப்பிட்டார். இந்த நிறப் பாகுபாட்டை பற்றி நான் ஒரு விசயத்தைக் அவருக்குச் சொல்ல விஉரும்புகின்றேன். அவர் மட்டுமல்ல னீங்களும் சற்று கவனமாகக் கேளுங்கள்.

” இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட்டுச் சாப்பிட விரும்பினான். அதற்கு முன்பு அவனுக்கு ரொட்டி சுட்டுப் பழக்கமில்லை. ஆனாலும், ஓரளவு அதை எப்படி செய்வது என்று அவனுக்குத் தெரியும். நீர் ஊற்றி மாவை பிசைந்தான். பிறகு வட்டமாக அதைத் தட்டி, அடுப்பின் மேலே வைக்கைப்பட்டிருந்த கல்லின்மேலே போட்டான். அது சரியாக வேகக்கூட இல்லை. அதற்குள் அதை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான்.

“அப்பொழுதுதான் அது சரியாக வேகாமல் வெள்ளை நிறத்துடனும், பச்சை மாவின் ருசியுடனும் இருப்பதைக் கண்டான். ரொட்டி மேலும் வெந்து வெள்ளை மாவின் நிறம் மாறிய பிறகுதான் அதை அடுப்புக் கல்லிலிருந்து எடுக்க வேண்டும் என்ற விசயம் அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. ஆகவே இரண்டாவது ரொட்டியை சற்று நேரம் கல்லிலேயே போட்டு விட்டான். ஒருவிதமான கருகல் வாசனை வந்த பிறகே ரொட்டியை எடுத்தான். ரொட்டி கறுப்பு நிறத்தில் தீய்ந்துபோய் இருந்தது. ரொட்டி இப்போது ருசிக்கவில்லை.

அதன்பிறகுதான் கடவுளுக்கு ஒரு விசயம் புரிந்தது. ரொட்டியை உடனே அடுப்பிலிருந்து எடுக்கக்கூடாது. அதிக நேரம் அடுப்பிலேயே போட்டிருக்கவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்தால் தான் ரொட்டி, சாப்பிடும் பக்குவ நிலைக்கு வந்திருக்கும் என்ற உண்மை புரிந்தது.

இதன் அடிப்படையில்தான் மனிதனுக்கு நிறங்களைக் கொடுத்தான் இறைவன். வேகாத ரொட்டி போன்ற அவசரப் படைப்புத்தான் வெள்ளை நிறத்தக் கொண்ட ஐரோப்பியர் மிகவும் நிதானமாக யோசித்தபின் உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆபிரிக்கர். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிதானமான நேரத்தில் படைக்கப்பட்டவர்கள்தான் இந்தியராகிய நாங்கள்” என்றுகூறி முடித்தார். அந்த அழகிய உதாரணத்தக் கேட்ட ஐரோப்பியர்களே ரசித்துக் கைதட்டினர்.

ஒரு சமயம் டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஒரு வெள்ளைக்காரரும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளையரின் பேச்சில், உலகிலேயே மேல் திசை நாடுகளைச் சேர்ந்தவர்களெ எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அவர், “உலக அளவில் மேல் நாட்டு மக்களே மேன்மைக்குரியவர்கள், நாடு, இனம்,மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் மேல் நாட்டவராகிய நாங்கள் வேறுப்பட்டிருந்தாலும் நிறத்தை பொறுத்தமட்டில் நாங்கள் அனைவருமே ஒன்றுபட்டிருக்கின்றோம் என்றார். அதுவரை அவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அவரது நிறவெறிக் கொள்கை தவறானது என்பதை நெத்தியில் அடித்தார் போல் கூற முடிவு செய்தார்.

”பாருங்கள் நீங்கள் கூறுவது உண்மைதான் உலகம் எங்கிலும் கழுதைகளிருந்தாலும், அவை நிறத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குதிரைகள் தான் எங்களைப் போல பல நிறங்களில் இருக்கும்” என்று ஒரு போடு போட்டர். அதைக் கேட்டதும் அந்த வெள்ளைக்காரரின் முகம் தொங்கிப் போய்விட்டது.

***

Friday, November 11, 2011

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 1வது நாளில் 214 ஓட்டங்களுக்கு 8 விக்கட்களை பெற்றிருந்த ஆஸி அணி 2ம் நாளில் மேலதிகமாக 70 ஓட்டங்களைப் பெற்று, 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க , தமது 1வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது, தொடர்ந்து தமது 2வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் தமது 2வது இன்னிங்ஸ்சில் 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 2ம் நாள் ஆட்ட நிறைவில் 1 விக்கட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றது.


பந்துவீச்சில் திருப்பு முனையை ஏற்படுத்திய தென்னாபிரிக்க அணியின் வெர்னன் பிலண்டெர்(7-3-15-5)

அந்தவகையில் 2ம் நாளில் மொத்தமாக 294 ஓட்டங்களுக்கு 23 விக்கட்கள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட 4வது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.என்னா ஒற்றுமை .....
11/11/11 ஆகிய இன்று 11மணி:11நிமிடம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற தேவைப்படும் ஓட்டங்கள் 111

3ம் நாளாகிய இன்று தென்னாபிரிக்க அணி 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

குறிப்பு -
 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த சந்தர்ப்பமானது ஆஸி அணி இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற 4வது மிகக்குறைந்த ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….

 27 விக்கட்கள், 157 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, லோர்ட்ஸ், யூலை1888.

 25 விக்கட்கள், 221 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, மெல்பேர்ன், ஜனவரி 1902.

 24 விக்கட்கள், 255 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1896.

 23 விக்கட்கள், 294 ஓட்டங்கள், நாள் 2 = ஆஸி v தென்னாபிரிக்கா, கேப் டவுன், நவம்பர் 10, 2011.

 22 விக்கட்கள், 197 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1890.

 22 விக்கட்கள், 207 ஓட்டங்கள், நாள் 1 = ஆஸி v மே.தீவுகள், அடிலெய்ட், டிசம்பர் 1951.

 22 விக்கட்கள், 195 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இந்தியா, மன்செஸ்டர், யூலை 1952.

 22 விக்கட்கள், 229 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இலங்கை, கொழும்பு, மார்ச் 2001.

 22 விக்கட்கள், 279 ஓட்டங்கள், நாள் 3 = இந்தியா v நியூசிலாந்து, ஹமில்டன், டிசம்பர் 2002.

***

Thursday, October 27, 2011

1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள தாவரம் ....!!!பார்ப்பதற்கு ஒக்டோபஸ் போன்று காட்சியளிக்கும் வெல்விட்ச்சியா என்கின்ற இந்த தாவரத்தின் சிறப்பியல்பு யாது தெரியுமா ?.... 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாட்களைக் கொண்டுள்ள வெல்விட்ச்சியா, ஆபிரிக்காவின் நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் பாலைவனங்களில் வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது இரண்டு இலைகளைக் கொண்டுள்ளன, அவை பல்வேறு சிறிய துண்டுகளாக வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது பாலைவனத்திலுள்ள சிறிய விலங்குகளுக்கு தங்குமிடமாக விளங்குகின்றன அத்துடன் இவை பாலைவன வாழ்க்கையில் முக்கிய வகிபாகத்தினை வகிக்கின்றன.இந்த தாவரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.வெல்விட்ச்சியா அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக இருப்பதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பினும் அதனது விதைகளுக்காக காடுகளிருந்து சட்டவிரோதமாக விலைபோகின்றன.

இந்த இனங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனால் இவை பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.இந்த தாவரத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஒஸ்ரியா நாட்டினை சேர்ந்த தாவரவியலாளர் பிரீட்ரிச் வெல்விட்ச்(1806-1872) ஆவார் . இவர் 1860ம் ஆண்டு அங்கோலா நாட்டின் தன் பாகத்திலுள்ள நமிப் பாலைவனத்தில் கண்டுபிடித்தார். பிரீட்ரிச் வெல்விட்ச் மகத்தான தாவரவியல் ஆராய்ச்சிக்காகவும், முதன்முதலில் கண்டறிந்து சேகரித்தமைக்காகவும் இத்தாவரமானது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

***

Friday, October 21, 2011

லிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……

லிபியாவில், அண்மைய மாதங்களில் வெடித்த மக்கள் புரட்சியின் உச்சக்கட்டமாக சர்வாதிகாரி முஅம்மர் கடாபி நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்டதனைக் குறிப்பிடலாம்.1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற லிபியா தேசத்தின் மன்னர் இத்திரிஸ்சின் ஆட்சியினை 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கேணல் முஅம்மர் கடாபி தலைமையிலான கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் முஅம்மர் கடாபி லிபியா நாட்டின் ஆட்சித் தலைவனாக முடிசூடிக்கொண்டான்.

ஆட்சிப் பொறுப்பினை கையகப்படுத்திய கேணல் முஅம்மர் கடாபி தனது ஆட்சிக்காலத்தில் லிபிய நாட்டின் தேசியக் கொடியில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தினான்.

லிபியா நாட்டின் தேசியக்கொடி மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:சுதந்திர லிபியா தேசமானது தமது முதலாவது தேசியக்கொடியினை 1951ம் உள்வாங்கிக்கொண்டது. இந்த தேசியக்கொடியானது 1969ம் ஆண்டுவரையும் நடைமுறையிலிருந்தது.1969ம் ஆண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய சர்வாதிகாரி கடாபி, சுதந்திர லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1972ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.


1972ம் ஆண்டு லிபியா அரபு குடியரசு ஒன்றியத்தில் இணைந்ததையடுத்து லிபிய தேசத்தின் தேசியக் கொடியினை சர்வாதிகாரி கடாபி மீண்டும் மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1977ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.சர்வாதிகாரி கடாபி, லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மீண்டும் 1977ம் ஆண்டு மாற்றியமைத்து புதியதொரு தேசியக்கொடியினை அறிமுகப்படுத்தினான். இந்த தேசியக்கொடியானது முழுமையாக பச்சை நிறத்தினை மாத்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த தேசியக்கொடியின் சிறப்பியல்பு யாதெனில்; தனது நாட்டின் தேசியக்கொடியில் வடிவமைப்புக்கள், சின்னங்கள், அல்லது ஏனைய விபரங்களின்றி முழுமையாக ஒரே வர்ணத்திலான(பச்சை) தேசியக்கொடியினை கொண்ட ஒரே நாடு லிபியாவாகும்.
பச்சை நிறமானது இஸ்லாம் மதத்தின் அடையாளமாகும், நீண்ட பக்தி மற்றும் மக்கள் அவர்களின் மதம் மீது கொண்ட மரியாதையினை வலியுறுத்துகின்றது.
அத்துடன் பச்சை நிறமானது லிபியா நாட்டின் தேசிய நிறமுமாகும்.

இந்த தேசியக்கொடியிலுள்ள பச்சை நிறமானது கடாபியின் பசுமைப் புரட்சியினைக் குறிப்பிடுவதாகும்.

சர்வாதிகாரி கடாபியின் மறைவுடன் லிபிய நாட்டின் 1951ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த தேசியக்கொடியானது லிபியாவின் புதிய தேசியக்கொடியாக மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.

***

கடாபியுடன் தொடர்புடைய எனது முன்னைய பதிவு: உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....


***

Wednesday, October 19, 2011

கலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெரியுமா?.........அதிகமான விலங்குகள் பாசியினை சாப்பிடுவதில்லை. ஏனெனில் பாசியானது சமிபாடடடைய கடினமானதுடன் குறைந்தளவான ஊட்டச்சத்தையே கொண்டுள்ளன. ஆனால் Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் அதிகளவான பாசிகளினை உட்கொண்டு தமது வயிற்றினை நிரப்பிக்கொள்கின்றன. பாசியானது விசேடமான இரசாயனங்களைக் கொண்டிருக்கின்றன, இந்த இரசாயனமானது Reindeer என்கின்ற ஒருவகை கலைமான்கள் தமது உடல் திரவியங்களை சூடாக வைத்திருப்பதற்கு உதவுகின்றன.Reindeer பனி சூழ்ந்த ஆர்ட்டிக் பிராந்தியத்தில் தமது வருடாந்திர பயணத்தினை மேற்கொள்கின்றபோது பாசியிலுள்ள இரசாயனம் Reindeer குளிரில் உறைவடைவதிலிருந்து பாதுகாக்கின்றது.

***

Tuesday, October 4, 2011

வாழ்க்கை என்பது எது ?.. அன்னை திரேசா மொழிந்தது ........வாழ்க்கை என்பது எது தெரியுமா? ...........

" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ; வாழ்க்கை அழகானது , அதனை ரசி ; வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ; வாழக்கை சவாலானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ; வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ; வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ; வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ; வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ; வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ; வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு; வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ; வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு " - அன்னை திரேசா

***

Saturday, October 1, 2011

100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்புத் தகவல்கள்……..!!!

அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆஸி – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்த 50வது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.

அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக……

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கொலின் கெளவ்ட்ரி ஆவார். தனது முதல் டெஸ்ட் போட்டி அறிமுகத்தினை பிறிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1954-55 பருவகாலத்தில் மேற்கொண்ட கொலின் கெளவ்ட்ரி, தனது 100வது டெஸ்ட் போட்டியினை எட்வஸ்டனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1968ம் ஆண்டு பருவகாலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இள வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். 1989/90 பருவகாலத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 29 வயது 134 நாட்களில் 2001 செப்டெம்பர் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.


 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் தமது 100வது டெஸ்ட் போட்டியில் கால்பதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளது.
*** 2000ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மன்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர்களான மைக் அதர்ட்டன் மற்றும் அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும்,
*** 2006ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சோன் பொல்லக் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் தமது 100 டெஸ்ட் போட்டியினை ஒரே டெஸ்ட் போட்டியில் பதிவுசெய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோ திகழ்கின்றார். 1990/91 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மார்க் வோ 8 வருடங்கள் 342 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1999/00ஆம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் பூர்த்திசெய்துகொண்டார்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மெதுவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக மே.தீவுகள் அணியின் கிளைவ் லொய்ட் திகழ்கின்றார். 1966/67 பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக மும்பாய் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் லொய்ட் 17 வருடங்கள் 137 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1983-84 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி பூர்த்திசெய்துகொண்டார்.


100வது டெஸ்ட் தொடர்பிலான எனது முன்னைய பதிவு - தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்

***

Tuesday, September 27, 2011

பெயர் வரக் காரணம் என்ன?.... # 06உலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரமாகும். பசுபிக் என இந்தச் சமுத்திரத்திற்கு பெயர் சூட்டியவர் யார் தெரியுமா?....... உலகின் முதல் நாடு காண் பயணியாகிய பேர்டினட் மகலன் ஆவான்.

போர்த்துக்கேயரான பேர்டினட் மகலன், அரச கடற்படையில் சேர்வதற்கான தனது விண்ணப்பத்தினை போர்த்துக்கேய நாட்டு அரசனாகிய இமானுவேல் நிராகரித்ததன் காரணமாக தன் நாடு மீது கொண்ட பற்றுறுதியை விலக்கிக்கொண்டு ஸ்பெய்ன் நாட்டுக்கு பயணமாகி, 1519ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாள், மகலனும், அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ரிடினினாட், கொன்செப்சியன், சென் அன்ரோனியோ, விக்டோரியா, சன்ரியாகோ ஆகிய 05 சிறிய படகுகளிலில் உலகினைச் சுற்றிய தனது நாடு காண் பயணத்தினை ஆரம்பித்தான். புதிய நாடுகளைக் கண்டறியும் பல்வேறு இடர்களை தனது கடற்பயணத்தில் எதிர்கொண்டு எஞ்சிய 3 படகுகளுடன் 38 நாட்கள் தென் அமெரிக்க ஜலசந்தியைச் சுற்றிலும் பயணித்து நவம்பர் மாத இறுதிவாரத்தில், மகலன் தனது சகாக்களுடன் புதிய சமுத்திரத்தில் பிரவேசிக்கின்ற அந்த தருணத்தினை “அழகான, அமைதியான கடல்” (“Beautiful, Peaceful Ocean” )என மகலன் வர்ணிக்கின்றான். “Pacific - பசுபிக்” என்பதன் அர்த்தம் “அமைதியானது” என்பதாகும்.


பேர்டினட் மகலன்

முதல் நாடுகாண் பயணியாகிய பேர்டினட் மகலன் அவர்கள் புதிய இந்த சமுத்திரத்தினைக் கண்டுபிடித்தபோது இது பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டதால் இதற்கு “பசுபிக் - Pacific” என பெயர் சூட்டினாலும் உண்மையில், உலகில் பல கடல் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு தோற்றுவாயாக பசுபிக் சமுத்திரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பசுபிக் சமுத்திரத்தில் தனது பயணத்தினை தொடர்ந்த மகலன் 1521ம் ஆண்டு மார்ச் மாதம் தற்போது “பிலிப்பைன்ஸ்” என்றழைக்கப்படுகின்ற நாட்டினைக் கண்டுபிடித்தான். சில வாரங்களுக்குப் பின்னர் மகலன், பிலிப்பைன்ஸ் ஆதிவாசிகளுடனான சமரில் முழுமையாக காயமடைகின்றான். கடற்பயணத்தில் எஞ்சிய விக்டோரியா என்கின்ற படகில் மகலனின் 18 சகாக்கள் ஸ்பெய்ன் நாட்டினைச் சென்றடைந்து உலகினைச் சுற்றிய முதலாவது வெற்றிகரமான நாடு காண் பயணத்தினை நிறைவுசெய்துகொண்டனர்.
மகலனின் நாடு காண் கடற்பயணப் பாதையானது வாசனைத் திரவிய வர்த்தகத்தில் பொருத்தமில்லாத பயணப்பாதை நிரூபித்தாலும் பேர்டினட் மகலனின் கடற்பயணமானது ஒரு தனி நபரின் மிகச் சிறந்த சாதனையாக மதிக்கப்படுகின்றது.


பசுபிக் சமுத்திரம் தொடர்பான முக்கியமான தகவல்கள்.......
உலகில் மிகப்பெரிய சமுத்திரமாகிய பசுபிக் சமுத்திரமானது 155 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள்(60மில்லியன் சதுர மைல்கள்) பரப்பளவிற்கு பரந்து வியாபித்திருக்கின்றது. பசுபிக் சமுத்திரமானது, உலக மொத்த நிலப்பரப்பினை விடவும் பெரியதாகும், அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பினை விடவும் 15 மடங்கு பெரியதாகும்.

பசுபிக் சமுத்திரத்தின் சராசரி ஆழம் 4637மீற்றர்கள்(2.8மைல்) ஆகும். அத்துடன் உலகில் மிக ஆழமான இடமாகிய மரியானா ஆழி அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மரியானா ஆழியானது 10924மீற்றர்கள்(அண்ணளவாக 7மைல்கள்) ஆழமானதாகும். பசுபிக் சமுத்திரத்தின் ஆழத்தின் காரணமாக சுனாமி அலைகளானது(பூகம்பத்தின் காரணமாக ஏற்படுகின்ற பாரிய அலைகள்) மணித்தியாலத்திற்கு 750கிலோமீற்றர் வேகத்தில் கரைகளை அடைகின்றன.

பசுபிக் சமுத்திரத்தில் 17 சுதந்திர தேசங்கள் அமைந்துள்ளன. அவையாவன அவுஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாடி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நவ்ரு, நியூசிலாந்து, பலவ், பப்வுவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சமாவோ, சொலமன் தீவுகள், தாய்வான், தொங்கா, துவாலு, வனவாட்டு. அத்துடன் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவுகள் அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மேலும், அவுஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களும், சிறு தீவுகளும் பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகின்றன. பசுபிக் சமுத்திரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பினை அவுஸ்திரேலியாக் கண்டமானது தன்னகத்தே கொண்டுள்ளது.


பசுபிக் சமுத்திரத்தில் 25000இற்கும் அதிகமான தீவுகள் காணப்படுகின்றன, உலகிலுள்ள ஏனைய சமுத்திரங்களில் அமைந்துள்ள தீவுகளினை ஒன்று சேர்க்கின்ற போதும் அவை பசுபிக் சமுத்திரத்திங்களில் அமைந்துள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உலக காலநிலையில் பிரதான மாறுதல்களைக் ஏற்படுத்துகின்ற எல் நினோ, லா நினா ஆகிய காலநிலைகள் பசுபிக் சமுத்திரத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பொறுத்தே தோற்றம்பெறுகின்றன.


உலகிலுள்ள 75%மான எரிமலைகள் பசுபிக் வலயத்திலேயே அமைந்துள்ளன, இதனால் இவ்வலயமானது தீப்பிழம்பு வளையம் - Ring of Fire என அழைக்கப்படுகின்றது.


பசுபிக் சமுத்திரத்தின் பிரதான வளமாக மீன்கள் விளங்குகின்றன. 1996ம் ஆண்டு, உலகில் மீன் உற்பத்தியில் 60% ஆன வகிபாகத்தினை பசுபிக் சமுத்திரமே வழங்கியது. அத்துடன் அவுஸ்திரேலியா, பப்வுவா நியூ கினியா, நிக்கரகுவா, பனாமா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முத்து உற்பத்தியில் விளைச்சலினைப் பெறுவதற்கு பசுபிக் சமுத்திரம் கைகொடுக்கின்றது. மேலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஐக்கிய அமெரிக்கா. பெரு ஆகிய நாடுகள் மசகு எண்ணெய், உயிர் வாயு ஆகிய சக்தி மூலங்களினைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதானமாக பசுபிக் சமுத்திர ஒதுக்கங்களிலேயே தங்கியுள்ளன.


பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிரதான துறைமுகங்களாக பாங்கொக்(தாய்லாந்து), கொங் கொங், லொஸ் ஏஞ்சல்(ஐ.அமெரிக்கா), மணிலா(பிலிப்பைன்ஸ்), புசான்(தென்கொரியா), சான் பிரான்சிஸ்கோ(ஐ.அமெரிக்கா), சீட்டில்(ஐ.அமெரிக்கா), ஷாங்காய்(சீனா), சிங்கப்பூர், சிட்னி(அவுஸ்திரேலியா), வெலிங்டன்( நியூசிலாந்து), யொகோஹமா(ஜப்பான்), விளாடிவொஸ்டோக்(ரஷ்யா), காவ் - சியுங்(தாய்வான்) ஆகியன விளங்குகின்றன.

***

Thursday, September 8, 2011

சமாதானத்திற்காக எழுத்தறிவினைப் பயன்படுத்துவோம்………!!!
வருடாந்தம், செப்டெம்பர் மாதம் 8ம் திகதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. உலக எழுத்தறிவு தினம் 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனி மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த வருட உலக எழுத்தறிவு தினத்திற்குரிய தொனிப்பொருள் - "சமாதானத்திற்கான எழுத்தறிவு" ஆகும்.

உலக எழுத்தறிவு தொடர்பான சில புள்ளிவிபரங்கள்…….

• உலகிலுள்ள வளர்ந்தோர் சனத்தொகையில் 1பில்லியனானோர் (26%) எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோர் தொகையில் மூன்றிலிரண்டு வகிபாகத்தினை பெண்களே வகிக்கின்றனர்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 98%மானோர் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே வசிக்கின்றனர்.

• அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் ஒட்டுமொத்த எழுத்தறிவு 49% ஆகும்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 52%மானோர் இந்தியா மற்றும் சீனாவில் வசிக்கின்றனர்.

• ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த எழுத்தறிவானது 60%இலும் குறைவாகும்.

***

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

***

Sunday, September 4, 2011

100 டெஸ்ட் வெற்றிகளில் பங்குபற்றி பொன்டிங் உலக சாதனைஇலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான காலி டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 1வது டெஸ்ட் போட்டியினை தனதாக்கிக் கொண்டது, இதன் மூலம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் 100 டெஸ்ட் வெற்றிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

1995ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற பொன்டிங் இதுவரையும் 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், இதில் 100 டெஸ்ட் போட்டிகளை ஆஸி அணி வெற்றியீட்டிள்ளது.

இதேவேளை, அதிக டெஸ்ட் வெற்றிகளைப்(48) பெற்ற அணித்தலைவராக ரிக்கி பொன்டிங் விளங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதிக டெஸ்ட் வெற்றிகளில் பங்குகொண்ட வீரர்கள் விபரம் வருமாறு;
 ரிக்கி பொன்டிங் * 100 டெஸ்ட் வெற்றி(153 டெஸ்ட்) 65.36%
 சேன் வோர்ன் * 92 வெற்றி(145 டெஸ்ட்) 63.45%
 ஸ்ரிவ் வோ * 86 வெற்றி(168 டெஸ்ட்) 51.19%
 கிளென் மெக்ராத் * 84 வெற்றி(124 டெஸ்ட்) 67.74%
 அடம் கில்கிரிஸ்ட் * 73 வெற்றி(96 டெஸ்ட்) 76.04%
 மார்க் வோ * 72 வெற்றி(128 டெஸ்ட்) 56.25%
 மத்தியூ ஹெய்டன் * 71 வெற்றி(103 டெஸ்ட்) 68.93%
 மார்க் பவுச்சர் * 70 வெற்றி(139 டெஸ்ட்) 50.36%
 ஜஸ்ரின் லாங்கர் * 70 வெற்றி(105 டெஸ்ட்) 66.67%
 ஜக்ஸ் கலிஸ் * 69 வெற்றி(145 டெஸ்ட்) 47.59%


இதேவேளை, ஏனைய நாடுகள் சார்பாக அதிக டெஸ்ட் வெற்றிகளில் பங்காற்றிய வீரர்கள் விபரம் வருமாறு;
 விவ் ரிச்சர்ட்ஸ்(மே.தீவுகள்) 63 டெஸ்ட்
 சச்சின் டெண்டுல்கர்(இந்தியா) 61 டெஸ்ட்
 முத்தையா முரளிதரன்(இலங்கை) 54 டெஸ்ட்
 இன்சமாம்-உல்-ஹக்(பாகிஸ்தான்) 49 டெஸ்ட்
 அன்ரூ ஸ்ட்ரோஸ்(இங்கிலாந்து) 44 டெஸ்ட்
 ஸ்ரிபன் ப்ளமிங்(நியூசிலாந்து) 33 டெஸ்ட்

***

Sunday, August 21, 2011

உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடு

சுவாரஷ்சியமான தகவல்களை பல்சுவைத் தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக…………………

 உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக பொலிவியா விளங்குகின்றது. 1825ம், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்ற பொலிவியா நாட்டில் 200 இற்கும் அதிகமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதேவேளை, 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக இத்தாலி விளங்குகின்றது. 50 இற்கும் அதிகமான அரசாங்கங்களும், 20 இற்கும் அதிகமான பிரதம மந்திரிகளையும் இத்தாலி நாடு 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்தியாவின் தேசிய விலங்கு புலி(Panthera Tigris) என்பது நாமறிந்ததே. ஆனால் 1972ம் ஆண்டுவரையும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே விளங்கியது உலகில் அதிக நிறை கொண்ட வீட்டுப் பூனையாக ' ஹிம்மி ~ Himmy விளங்கியதாம். இதன் நிறை 21.3 கிலோகிராம் ஆகும். ஹிம்மி 1984ம் ஆண்டு இறந்துவிட்டது. ஒவ்வொரு துளி கடல் நீரிலும் சராசரியாக 1 பில்லியன் தங்க அணுக்கள் உள்ளதாம்.

 எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.

***

Tuesday, August 9, 2011

உலகினை வாட்டி வதைக்கும் வறுமையும், பஞ்சமும்

அண்மைய நாட்களில் உலக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள், ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, மற்றும் ஆபிரிக்க குடியரசு போன்ற நாடுகளின் மக்கள் உணவுப் பற்றாக்குறையினால் மிகவும் துன்பப்படுகின்றனர். சோமாலியா நாட்டில் நிலவுகின்ற உள் நாட்டுக்குழப்பங்கள் மக்களினை வாட்டி வதைக்கின்றன. உணவின்றி சின்னஞ்சிறு குழந்தைகள் பசியினைப்போக்க மண்ணினை உட்கொள்கின்றர் என செய்திகள் தெரிவிக்கினறன. சோமாலியா தேசத்தில் கடந்தாண்டு மட்டும் விலைவாசி மட்டும் 270 சதவீதம் உயர்வடைந்துள்ளதுடன், அங்கு தொற்று நோயும் ஏற்பட்டுள்ளதுடன் , வரட்சியின் காரணமாக 90% மான கால்நடைகளும் உயிரிழந்துவிட்டன. இதுபோன்ற நிலையே ஏனைய ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.செல்வந்தர்களே ஒரு கணமாவது எங்களை மனதில் கொள்; ஒரு வேளை உணவையாவது எமக்களிக்க முன் வாருங்கள்பசியினால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குழந்தைகளின் சார்பில் ஓர் அன்புக்குரல்………..


 ஐ.நா உணவு விவசாய நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 110கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி,பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர். குறிப்பாக ஆசியா, மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் 65கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினரும், ஆபிரிக்காவின் சகாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள நாடுகளில் 28கோடி மக்கள் தொகையினரும் பசி, பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர்.

 பசி,பட்டினியின் காரணமாக வருடாந்தம் 15மில்லியன் குழந்தைகள் மரணிக்கின்றன.

 பசி, பட்டினியால் வாழும் மக்கள் தொகையினர் உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.

 உலக மக்களில் 12 பேரில் ஒருவர் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5வயதுக்குட்பட்ட 160மில்லியன் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. [மூலம்~ ஐ.நா உணவு, விவசாய அமையம்]

 நாளொன்றுக்கு சராசரியாக 1800 கலோரியினைவிடவும் குறைவான கலோரியினை உண்பவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றார்கள்..; போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில், அரைப்பங்கினர் தெற்காசியாவிலும், மூன்றிலொரு பங்கினர் உப-சகாரா நாடுகளிலும் வாழ்கின்றனர்.

 உலகில், 120 கோடி மக்கள் நாளாந்தம் 1800 கலோரியினைவிடவும் குறைவாகவே உட்கொள்கின்றனர்.

 உலகில் அண்ணளவாக 183மில்லியன் குழந்தைகள் தமது வயதிற்கேற்ற நிறையினைக் கொண்டிருக்கவில்லை.

 உலகில், ஒவ்வொரு 6 செக்கன்களுக்கும் பசி,பட்டினியின் காரணமாக ஒருவர் இறக்கின்றார்.

 உலகில் 3பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொலரினையே உழைக்கின்றனராம்.

***

Thursday, July 28, 2011

2000 டெஸ்ட் போட்டிகளை ருசித்த கிரிக்கெட்…………...

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த 1வது டெஸ்ட் போட்டியானது, 2000மாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி, இந்திய அணியினை 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியானது இரு அணிகளும் தமக்கிடையே மோதிய 100வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில், சில சுவாரஷ்சியமான கிரிக்கெட் தகவல்கள் உங்களுக்காக…………

 1990ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் சுவாரஷ்சியமானதாகும். ஃபொலோ - ஒன் நிலையிலிருந்து மீள்வதற்கு 24 ஓட்டங்களினைப் பெறவேண்டிய கட்டத்தில் இறுதிவிக்கட் இணைப்பாட்டத்தில் இந்திய அணியின் கபில் தேவ் மற்றும் நரேந்திர கிர்வானி ஆகியோர் களத்தில் இருந்தனர். வலது முறை சுழற்பந்துவீச்சாளர் எட் ஹெம்மிங்ஸ் வீசிய முதலிரண்டு பந்துவீச்சுகளினையும் தடுத்தாடிய கபில் தேவ், மிகுதி நான்கு பந்துவீச்சுக்களையும் ஆறு ஓட்டங்களாக விளாசினார். அடுத்த ஓவரின் முதல் பந்துவீச்சினை எதிர்கொண்ட நரேந்திர கிர்வானி, அங்குஸ் ஃப்ரெசரினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.*** டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் கபில் தேவ் ஆவார்.

 மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ். இவரின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 57 இலும் அதிகமாகும். ஆனால் இவரின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சராசரி 0 ஆகும். ஏனெனில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் 1973ம் ஆண்டு ஒரேயொரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் பங்குபற்றி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக சதத்தினை முச்சதமாகப்(365* எதிர் பாகிஸ்தான்) பெற்ற ஒரே வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆவார்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஓட்டங்களினை விடவும் விக்கட்களினை அதிகமாக வீழ்த்திய வீரராக இந்தியாவின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் விளங்குகின்றார். 58 டெஸ்ட் போட்டிகளில் 177 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுள்ள BS சந்திரசேகர் 242 விக்கட்களினை வீழ்த்தியுள்ளார்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 நாடுகள் பங்குபற்றிய முதலாவது முத்தரப்பு டெஸ்ட் சுற்றுத்தொடரில்(27 மே 1912 – 22 ஆகஸ்ட் 1912) பங்குபற்றிய நாடுகள் இங்கிலாந்து, ஆஸி, தென்னாபிரிக்கா ஆகியனவாகும். இச் சுற்றுத்தொடரினை நடாத்திய நாடான இங்கிலாந்து(4 வெற்றி, 2 சமநிலை) முதல் ஸ்தானத்தினையும், ஆஸி(2 வெற்றி, 1 தோல்வி, 3 சமநிலை) இரண்டாம் ஸ்தானத்தினையும், தென்னாபிரிக்கா(5 தோல்வி, 1 சமநிலை) மூன்றாம் ஸ்தானத்தினையும் பெற்றுக்கொண்டன.


***

Saturday, July 16, 2011

இதயமே.......!!! இதயமே......!!!

நண்பர்களே, நீண்ட நாள் இடைவேளையின் பின்னர் பதிவுலகில் உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். சில பல காரணங்களினால் பதிவுலகில் நீண்ட நாட்களாக பதிவிடமுடியவில்லை. வாய்ப்புக்கள் கிடைக்கின்றபோது பதிவுகளினூடாக உங்களினைச் சந்திக்க எண்ணியுள்ளேன்.

அந்தவகையில், " உயிரினங்களின் இதயம் " தொடர்பான சுவையான தகவல்களினை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 நீலத்திமிங்கிலங்களின் இதயத்தின் நிறை அரைத் தொன்னுக்கும் அதிகமாகும்.

 ஒட்டகச்சிவிங்கிகள் அதனது பலமிக்க இதயத்திலேயே தங்கியுள்ளன, அவற்றின் இதயத்தின் நிறை 12கிலோவிலும் அதிகமாகும். ஒட்டகச்சிவிங்கிகள் அதனது நீண்ட கழுத்திலிருந்து அதனது தலையினை நோக்கி சுவாசிப்பதற்கு போராடுகின்றது.


 உணவுவேளைகளின்போது மலைப்பாம்புகளின் இதயமானது பெரியதாக வளர்ச்சியடைகின்றன.

 நீலத்திமிங்கிலங்களின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 06 முறையாகும்.

 ஒரு சராசரி மனிதனின் இதயமானது வருடாந்தம் 35மில்லியன் தடவைகள் துடிக்கின்றன.

 ஒக்டோபஸ் 03 இதயங்களைக் கொண்ட உயிரினமாகும்.

 பாலூட்டிகளில், அதனது உருவத்துடன் ஒப்பிடுகின்றபோது மிகப்பெரிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் நாய் ஆகும்.

 விலங்குகளில் மிகச்சிறிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் சிங்கம் ஆகும்.
 தவளைகளினதும், பல்லிகளினதும் இதயமானது 03 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பறவைகளினதும், பாலூட்டிகளினதும் இதயமானது 04 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்றன.

***

Tuesday, June 21, 2011

இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.........


இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.........

இன்று 21ம்திகதி தனது 3வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் "ஜயபிரதா" செல்லத்துக்குவாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........


Happy Birthday Wishes………….


பத்திரிகையில் வெளியான எங்கள் மருமகளின் பிறந்தநாள் வாழ்த்து......

( நன்றிவிஜய் 22.06.2010)

***

Saturday, June 4, 2011

வலையுலகில் இரண்டாண்டு பூர்த்தி........
ஆம்.... நாளைய தினத்துடன், நான் வலையுலகில் தடம்பதித்து வெற்றிகரமாக ஈராண்டுகள் பூர்த்தியடைகின்றது. இந்த ஈராண்டு காலத்தில் வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.


21.03.2010 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் இணையத்தில் எம்மவர்கள் பக்கத்தில்(யாழ்தேவி நட்சத்திரப் பதிவர்) லோகநாதனின் பகிர்வுகள் வலைப்பதிவு அறிமுகம்...

என் பொழுதுபோக்குப்பணிகளில் ஒன்றாக வலைப்பதிவினை இட்டுவந்த நான் வலையுலகில் ஈராண்டுகள் பூர்த்திசெய்கின்ற இந்தத் தருணத்தில் 300வது பதிவினை அண்மிக்கின்றேன். வலைப்பதிவில் ஆக்கங்களினை இடுகின்றபோது ஒவ்வொரு பதிவாக்கத்திற்காகவும் மிகவும் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினை மேற்கொள்கின்றேன் என்பது எனது வலைப்பக்கத்தினை அவதானிப்பவர்களுக்கு தென்படும் என எண்ணுகின்றேன்.

சில இணையத்தளங்கள், சஞ்சிகைகளில் என் வலைப்பதிவு ஆக்கங்கள் அப்படியே மீள்பிரசுரமாகியுள்ளன/ மீள்பிரசுரமாகின்றன. எனது வலைப்பதிவு ஆக்கங்களினைப் மீள்பிரசுரிப்பதை வரவேற்கின்றேன். ஆனால் ஆக்கத்துக்கு பொறுப்பான என் வலைப்பதிவின் பெயரினை/ எனது பெயரினைக் குறிப்பிடாத இணையத்தளங்கள், சஞ்சிகைகளின் செயற்பாட்டினை ஆட்சேபிக்கின்றேன்/ எதிர்க்கின்றேன்.

என் பதிவுலகப் பயணத்தில் ஏதேனும் குறைகளிலிருப்பின்/ விமர்சனங்களிலிருப்பின் (கருத்துரையிடவும்) அவற்றினை நிறைவாகக்கொண்டு உங்கள் வாக்குகளினையும், பின்னூட்டங்களினையும் வழங்கி ஆதரவினையும், ஊக்கத்தினையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவே என் வலைப்பதிவில் புதுப்புது தகவல்களினை பதிவிடுவதற்கு உந்துசக்தியளிக்கும்.

வலையுலகில் இரண்டு வெற்றிகரமான ஆண்டுகளைப் பூர்த்திசெய்து மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்தத் தருணத்தில் என் வலைப்பதிவு ஆக்கங்களினை தொகுத்து புத்தகமொன்று வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது, வாய்ப்புக்கள் வருகின்றபோது என் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என நம்புகின்றேன்.


(குறிப்பு – நாளை 5ம் திகதி பயணமொன்றின் காரணமாக இந்தப் பதிவினைப் பதிவதற்கு வாய்ப்பில்லை, இதன் காரணத்தினாலேயே முற்கூட்டியே இப்பதிவினை இடுகின்றேன், நேரம் கிடைக்கின்றபோது அடுத்த பதிவில் சந்திப்போம்... நன்றிகள்... வாழ்த்துக்கள்...)

அன்புடன்...
கே.கே.லோகநாதன்

***

Thursday, June 2, 2011

உலகில் மிக நீளமான கடற் பாலம்....உலகில் மிக நீளமான கடற் பாலமாகிய சிங் டொவ் (Qingdao) வளைகுடாப் பாலமானது சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலமானது கிழக்கு சீனாவின் ஷண்டொங் மாகாண துறைமுக நகரமாகிய சிங் டொவ் விலிருந்து ஹுவாங்டோ மாவட்டத்தினை இணைக்கின்றது. 41.58 கிலோமீற்றர் நீளமான இந்தப் பாலத்தினை நிர்மாணிக்க 1.39 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது.இந்த பாலம் நிர்மாணிக்கப்பட முன்னர்; உலகில் மிக நீளமான கடற் பாலமாக ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ்சில் அமைந்துள்ள 38.4 கிலோமீற்றர் நீளமான பொன்சர்ட்ரைன் ஏரிக் கரைப்பாலமானது விளங்கியதுடன்; சீனாவின் மிக நீளமான கடற் பாலமாக 36 கிலோமீற்றர் நீளமான ஹங்ஷூ வளைகுடாப் பாலமானது விளங்கியது.

எதிர்வருகின்ற ஜூன் இறுதியில் இந்த வளைகுடாப் பாலமானது திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகிலுள்ள மிக நீளமான 10 பாலங்களில் 7 பாலங்கள் சீனாவிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


*****-----------**************************


வாசித்துவிட்டீர்களா......

***

Wednesday, May 25, 2011

ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு……!!!


சுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களினைக் கொண்ட பதிவு உங்களுக்காக.......


 ஒபெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரே தென் அமெரிக்க நாடு வெனிசுவேலா ஆகும்.

 உலகிலுள்ள பிரதான ஆறுகளில், அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற ஆறு அமேசன் நதியாகும்.

 கலஹாரி பாலைவனத்தில் அதிகளவான பரப்பளவினைக் தன்னகத்தே கொண்டுள்ள நாடு பொட்ஸ்வானா ஆகும்.

 குக் தீவுகளின் சிறப்பம்சம் யாது தெரியுமா ...... குக் தீவுகள் பெருமளவில் காடுகளினால் சூழப்பட்டுள்ளது.

 பறவைகளினைப்போல் உங்களினால் சாப்பிடமுடியுமா?.... ஏன் தெரியுமா?.... அதிகளவான பறவைகள் தனது உடல் நிறையில் இரு மடங்குக்கும் அதிகமான நிறையில் உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றனவாம்.

 1876ம் ஆண்டு உலகுக்கு தொலைபேசியினைக் அறிமுகப்படுத்தியவர் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் என்பது நாம் அறிந்ததே... கிரஹம் பெல் தொலைபேசியினை அறிமுகப்படுத்திய முதல் மாதத்தில் ஆறு தொலைபேசிகள் மாத்திரமே விற்பனையாகியதாம்.

 உலகப் பிரசித்தி பெற்ற பழங்களாக ஸ்ட்ரோபெரி பழங்கள் விளங்குகின்றன. ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு எது?.... பெல்ஜியம்
 உலக சாதனை தகவல்களினை தன்னகத்தே உள்ளடக்கிய நூலாக கின்னஸ் புத்தகங்கள் விளங்குகின்றன. பொது நூலகங்களிலிருந்து அதிகமாக களவாடப்படுகின்ற நூலாகவும் கின்னஸ் புத்தகங்களே விளங்குகின்றனவாம்.

 உலக சனத்தொகையில் 13 சதவீதமானோர் பாலைவனங்களினை அண்மித்த பிரதேசங்களிலேயே வாழ்க்கை நடாத்துகின்றனர். ஆண்களினைவிடவும் பெண்களே அதிகமான சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளனராம்.


***

Tuesday, May 24, 2011

கவனக்குறைவு கண்டுபிடிப்புக்கள்...... #02கவனக்குறைவுகளால் அல்லது எதிர்பாராத சில நிகழ்வுகளினால் கூட பல நேரங்களில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், சமையல் சாதனமாகிய சூட்டடுப்பு(Microwave Oven) கண்டுபிடிக்கப்பட்டதும் இப்படித்தான்.


டாக்டர் பேர்சி ஸ்பென்சர்

பேர்சி ஸ்பென்சர் என்கின்ற ஆராய்ச்சியாளர்,2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் மக்னேற்றோன்ஸ் குழாய்களின் உதவியுடன் ரேடார் தொகுதியின் செயல்பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார்.1946ம் ஆண்டு ஒரு நாள் மக்னேற்றோன்ஸ் குழாயுடன் பயணித்தபோது தனது பையினுள் காணப்பட்ட சொக்லெட் துண்டு உருகியிருப்பதனை அவதானித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தனது ஆராய்ச்சினை மேற்கொண்டு சூட்டடுப்பினைக் கண்டுபிடித்தார்.

***

Tuesday, May 17, 2011

பறவை உருவில் காணப்படுகின்ற வினோத தாவரங்கள்.....

 தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சுதேச தாவரங்களாகக் காணப்படுகின்ற "Strelitzia reginae" தாவர இனங்கள் பார்ப்பதற்கு பறவையின் தோற்றத்தில் காணப்படுகின்றன.

"சுவர்க்கத்தின் பறவைகள்"ன்றழைக்கப்படும் தாவரங்கள் ஓர்கிட் தாவரங்கள் மிகச்சிறிய விதைகளினைக் தன்னகத்தே கொண்டுள்ளன. 1.25 மில்லியனுக்கும் அதிகமான ஓர்கிட் விதைகளினை ஒன்றுசேர்க்கின்றபோது கிடைக்கும் நிறை எவ்வளவு தெரியுமா?..... 01கிராம்தான்
 இவ்வுலகிலுள்ள 200,000க்கும் மேற்பட்ட பூக்களின் வகைகளில் மிகச்சிறிய பூவாக "டக்வீட்"(Duckweed) பூவே விளங்குகின்றது. இதனை நுணுக்குக்காட்டியின்மூலம் மாத்திரமே பார்க்கமுடியும்.


***

Monday, May 16, 2011

கலண்டரின் தனது பெயரினையும், தனது அன்னையின் பெயரினையும் சேர்த்துக்கொண்ட ஜனாதிபதி.......துர்க்மெனிஸ்தான் நாட்டினை ஆட்சிசெய்த ஜனாதிபதி சபர்முராட் நியாஸோவ் (19 பெப்ரவரி 1940 - 21 டிசம்பர் 2006) உலகத்தில் ஆட்சிசெய்த சர்வாதிகாரிகளில் சிறப்பிடம் பெறுகின்றார். இவரின் ஆட்சிக்காலத்தில் துர்க்மெனிஸ்தான் நாட்டில் எந்தவிதமான தேவாலயங்களும் காணப்படவில்லை. ஏனெனில் இவரின் கட்டளையின் பிரகாரம் தேவாலயங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

ஒவ்வொருவருடமும் தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துகொள்வாராம், ஆனாலும் அந்நாட்டின் காங்கிரஸ் சபையானது இவரிற்கு ஆட்சியதிகாரத்தினை தொடர்வதற்கு அனுமதிவழங்குமாம். கலண்டரில் ஜனவரி மாதத்திற்குப் பதிலாக இவர் தனது பெயரான "துர்க்மென்வாஷி"யினை இட்டுக்கொண்டதுடன், ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக தனது அன்னையாரின் பெயரினை இணைத்துக்கொண்டார். இவர் தன்னைத்தானே துர்க்மெனிஸ்தான் தேசத்தின் தந்தையாக பிரகடனப்படுத்திக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .


*****-------*******--------------**********

படுதோல்வியினைத் தழுவிய கருணாநிதி.....தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜெயலலிதா தலைமையிலான அ.திமு.க ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றிக்கொண்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க படுதோல்வியினை தழுவிக்கொண்டது.

ஜெயா தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்கின்றார் .


***

வாசித்துவிட்டீர்களா.....?

தமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........

***

Wednesday, May 11, 2011

தமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........

2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனி தேசத்தினை ஹிட்லர் தலைமையிலான நாசிப் படையினர் ஆட்சி செய்தபோது ஹிடலரின் தொல்லைகளினால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தமது நோபல் பரிசுப் பதக்கங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கருதி ஜேர்மனியினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோர் தமது நோபல் பரிசுப் பதக்கங்களினை ஹிட்லரின் நாசிப் படையினருக்குப் பயந்து சட்டவிரோதமாக டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த பெளதிகவியலாளர் நீல்ஸ் பொஹ்ர் அவர்களிடம் கையளித்தனர்.

மக்ஸ் வொன் லோவ்ஆனால் 2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனியானது, டென்மார்க் நாட்டினை ஆக்கிரமித்து தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபோது மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோரின் நோபல் பரிசுப் பதக்கங்களினை ஜேர்மனிய நாசிப் படையினரிடமிருந்து பாதுகாப்பதற்கு நீல்ஸ் பொஹ்ர் தீவிர கரிசனை காட்டினார். தனது ஆய்வுகூடத்தில் பணியாற்றிய ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த ஜோர்ஜ் டி ஹெவிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய நோபல் பரிசு தங்கப் பதக்கங்களினை Aqua regia அமிலத்திராவகத்தில் கரைக்க முடிவெடுத்தார். (Aqua regia திராவகம் என்பது தங்கத்தைக் கரைக்கப் பயன்படுத்தப்படும் நைதரிக்கமிலம் + ஐதரோகுளோரிக் அமிலம் ஆகிய அடர் அமிலங்களின் கலவை ஆகும்)

நோபல் பரிசுப் பதக்கங்கள் மறைத்துவைக்கப்பட்ட அமிலத்திராவகப் போத்தலானது, ஏனைய அமிலத் திராவகப் போத்தல்களோடு போத்தலாக அலுமாரித்தட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜேம்ஸ் பிரான்ங்2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர், அமிலத் திராவகத்தில் கரைந்திருந்த நோபல் பரிசு தங்கப் பதக்கங்கள் நோபல் பரிசு அமையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாக நோபல் பரிசு அமையம், மாதிரிப் பதக்கங்களினை மக்ஸ் வொன் லோவ் மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோருக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்ஸ் வொன் லோவ் 1914ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜேம்ஸ் பிரான்ங் 1925ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீல்ஸ் பொஹ்ர் 1922ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜோர்ஜ் டி ஹெவிஸ் 1943ம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

***
Blog Widget by LinkWithin