Monday, November 29, 2010

சமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....உலக சமாதானத்துக்காக பாடுபட்டு அரும்பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதே சமாதான நோபல் பரிசாகும். அந்தவகையில், 1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசுக்கு, சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் பெயரினை சுவீடன் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த E.G.C. Brandt என்பவர் பிரேரித்தார். எவ்வாறாயினும் Brandt தனது மனதினை மாற்றிக்கொண்டு 1939 பெப்ரவரி 1ம் திகதி இடப்பட்ட கடிதத்தில் தன்னால் பிரேரிக்கப்பட்ட அடோல்ப் ஹிட்லரின் பெயரினை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினைப் பெறுவதற்கு யாருமே தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

========================================


உலகினை பாழ்படுத்தும் கைத்தொலைபேசிக் கழிவுகள்.....உலகில் வருடாந்தம் 125 மில்லியன் செல்போன்கள் கழிவுகளாக தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மக்கள் தமது செல்போன்களினை அடிக்கடி மாற்றிக்கொள்வது அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற உலக போக்காகும். இதற்கான எடுத்துக்காட்டாக; கொரிய நாட்டு மக்கள் வருடாந்தம் தமது செல்போன்களினை பொதுவாக மாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழிவுகளாக தூக்கி வீசப்படுகின்ற செல்போன் இலத்திரனியல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட்டமை என்பது கவலைதரும் செய்தியாகும்.


===========================================


உலகில் மிக அரிதான சொக்லேட்வகை
உலகில் மிக அரிதான சொக்லேட் துண்டாக போர்செலனா(Porcelana) துண்டு விளங்குகின்றது. இந்த சொக்லேட் வகையில் 20,000 துண்டுகளே மாத்திரமே வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Tuesday, November 23, 2010

மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........மின்னல் காரணமாக உலகில் வருடாந்தம் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், பெரும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றது. ஆகவே மின்னல் வேளைகளில் எமது பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் அதிகளவானோர் பயப்படுகின்ற விடயங்களில் மின்னலும் ஒன்றாகும். அந்தவகையில் மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........

 மின்னலின் வெப்பநிலையானது 50000 டிகிரி பரனைட்டினை விடவும் அதிகமாகும். ஆனால், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது இதனைவிடவும் குறைவாகும்.(11000 டிகிரி பரனைட்)

 மின்னலின் சராசரி நீளம் 6 மைல்களாகும்.

 இடிமுழக்கத்தின் சராசரி அகலம் 6-10 மைல்களாகும்.

 இடிமுழக்கமானது, மணித்தியாலத்துக்கு சராசரியாக 25 மைல்கள் பயணிக்கின்றது.

 சாதாரணமான ஒரு மின்னலின் பிரகாச வெளிச்சமானது 0.25 செக்கன்களே நீடிக்கும், அத்துடன் சாதாரணமான ஒரு மின்னலானது 3 or 4 தனிப்பட்ட ஒளிக்கீற்றுக்களைக் கொண்டிருக்கும்.

 புவியின் மேற்பரப்பில் ஏதோ ஒரு இடத்தில் செக்கனுக்கு 100 தடவைகள் மின்னல் தாக்குகின்றது.

 சராசரியாக, 3-4 மைல்கள் இடைவெளியில் ஏற்படுகின்ற இடியினை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். ஈரப்பதன், நிலப்பரப்பு , மற்றும் ஏனைய காரணிகளிலேயே இது தங்கியுள்ளது.

 மின்னல் தொடர்பான கற்கைநெறியின் விஞ்ஞானப்பெயர் Fulminology ஆகும்.

 ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட இடிமுழக்கங்கள் நிகழுகின்றன. உக்கிரமான உயர்வேக காற்று, திடீர் வெள்ளப்பெருக்குகள், சுழல் காற்றுக்களினை உருவாக்குவதற்கு இடிமுழக்கங்களில் 10% போதுமானதாகும்.

 உலகில் உயர்விகிதத்தில் மின்னல் செயற்பாடு நிகழுகின்ற நாடுகளில் சிங்கப்பூர் நாடும் ஒன்றாகும்.

==================================

இலங்கையில், தற்போதைய காலப்பகுதி அதிகமான மழை பெய்கின்ற காலப்பகுதியாகும். ஆனால் கிழக்கிலங்கையில் மழையின் தாக்கம் முழுமை பெறவில்லை, செப்டம்பர் மாத முற்பகுதியில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் மழையின்றி பெருமளவில் பாதிப்பினை எதிர்நோக்கினர். சிலர் தமது விவசாய செய்கையினை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் தொடர்ந்து பெய்கின்ற மழை இப்போது நிமிடக்கணக்கிலேயே பெய்கின்றது. இன்றும் வானம் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கின்றது. (மழை வரும் ஆனால் வராது???....)

***

Sunday, November 21, 2010

மூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சில சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.

 தென் அமெரிக்க இராட்சத எறும்பு தின்னிகள், நாளாந்தம் 30,000 எறும்புகளுக்கும் அதிகமாக சாப்பிடுமாம்.

 ஹம்மிங்பேர்ட் பறவைகள், தனது உடலின் நிறையில் அரைப் பங்களவிலான உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றன.

 புற ஊதாக்கதிர்களையும், அக ஊதாக்கதிர்களையும் பார்க்கக்கூடிய ஒரே உயிரினம் தங்கமீன்(Goldfish) ஆகும்.நியூசிலாந்து நாட்டின் கரையோரத் தீவுகளில் காணப்படுகின்ற Tuatara என்கின்ற பல்லி இனங்கள் 03 கண்களைக் கொண்டுள்ள உயிரினமாகும். ~ அவற்றுக்கு இரண்டு கண்கள் தலையின் மத்தியிலும், மற்றைய கண் தலையின் உச்சத்திலும் காணப்படுகின்றது. பன்றிகளின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாகும்.

 புற ஊதாக் கதிர்களினை புறாக்கள் பார்க்கக்கூடியவையாகும்.

 பறவைகளினால் இனிப்புச் சுவைகளினை சுவைக்கமுடியாது. ஏனெனில் பறவைகளுக்கு இனிப்புச் சுவை அரும்புகள் இல்லை.

 மரங்கொத்திப் பறவைகள் ஒரு செக்கனில் இருபது தடவைகள் மரங்களினை கொத்தக்கூடியவையாகும்.

 புறாக்கள் மணிக்கு 100 மைல் வேகத்துக்கு அப்பால் பறக்ககூடிய இயலுமை கொண்டவையாகும்.

***

Wednesday, November 17, 2010

பல்சுவை விளையாட்டுத் தகவல்கள்......

ஒலிம்பிக், கிரிக்கெட், உதைபந்தாட்டம் தொடர்பான சில சுவாரஷ்சியமான பல்சுவை விளையாட்டுத் தகவல்கள் உங்களுக்காக......

உலக சாதனை ஆனால் தங்கப் பதக்கம் இல்லை....1924ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவினைச் சேர்ந்த றொபட் லிகென்ரி, பென்டத்லோன் விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 25அடி 4 அங்குலங்கள் பாய்ந்து சாதனை படைத்தார். பென்டத்லொன் விளையாட்டு நிகழ்வில் றொபட் லிகென்ரி 3ம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றார்.

அதே ஒலிம்பிக்கில் பிறிதொரு போட்டி நிகழ்வான நீளம் பாய்தல் போட்டியில் 24அடி 5 அங்குலங்கள் பாய்ந்த William Hubbard, USA தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அசத்தல் அறிமுகம்

1999 செப்டம்பர் 5ம் திகதி, சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வவெல் ஹின்ட்ஸ் அறிமுகமானார். அதேபோட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சடகோபன் ரமேஸ் அறிமுகமானார்.

இவர்களுக்கிடையிலான ஒற்றுமை யாதெனில் இவர்கள் இருவரும் பிறந்தது ஒரே ஆண்டில்(1975), ஒரே மாதத்தில்(ஒக்டோபர்), ஒரே நாளில்(16ம் திகதி) அத்துடன் இவர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


31-0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற அணி...

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு அணிகளினை தெரிவுசெய்வதற்காக தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. அந்தவகையில் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் ஈட்டப்பட்ட மிகப்பிரமாண்ட வெற்றியாக, 2002ம் ஆண்டு தென் கொரியா, ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டத்திற்காக அணிகளினை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, அமெரிக்க சமோவா அணியினை 31-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்சுற்றுலா மே.தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. நேற்றைய 2ம் நாளில் மே.தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 333 ஓட்டங்களினைப் பெற்றார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்ட 4வது வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் டொன்.பிரட்மன், பிரைன் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோரே 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்டவர்களாவர்.

கிறிஸ் கெய்ல், இந்திய உப கண்டத்தில் பெற்ற முதல் டெஸ்ட் சதமும் இதுவே ஆகும்.

அத்துடன் மே.தீவுகளுக்கு வெளியே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்ற மே.தீவின் வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் விவ் ரிச்சர்ட்ஸ்சின் 291 ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 1976.

மேலும் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்றவராக மே.தீவின் கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் யூனிஸ் கானின் 313 ஓட்டங்கள்,2009.


***

Monday, November 15, 2010

தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் # 01

இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, விடிவுக்கு தமது கண்டுபிடிப்புக்களின் மூலம் புகழ் சேர்த்த விஞ்ஞானிகள், தமது வாழ்நாட்களினை தமது கண்டுபிடிப்புக்க ளுக்காகவே இழந்திருக்கின்றார்கள்.

இன்று நாம் பயன்படுத்துகின்ற, பயன்பெறுகின்ற பலவற்றுக்கு இத்தகைய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணமாகும்.

உலகத்தின் விடிவுக்காக பாடுபட்டு, தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் தொடர்பிலான ஆக்கத்தின் முதற்பாகம் உங்களுக்காக........

(01) கலிலியோ கலிலி(1564-1642)இத்தாலி நாட்டினைச் சேர்ந்த கலிலியோ கலிலி சிறந்ததொரு வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் ஆவார். தொலைநோக்கியின் மூலம் பிரபஞ்சத்தினை பற்றிய கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டு இந்த பிரபஞ்சம் பற்றிய பல்வேறு கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவர் கலிலி ஆவார்.
சூரியனை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய கலிலி, தொலைநோக்கியின் மூலம் அதிக நேரம் அண்டவெளியினை உற்றுப்பார்ப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயற்பாடு அவரின் கண்பார்வையில் கடுமையான பாதிப்புக்களினை ஏற்படுத்தியதன் விளைவால் தன் வாழ்நாளின் இறுதி 4 வருடங்களினையும் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் கழித்தார்.
உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த கலிலியோ கலிலி, "நவீன இயற்பியலின் தந்தை" என அழைக்கப்படுகின்றார்.

(02) மேரி கியூரி அம்மையார்(1867-1934)பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் மேரி கியூரி அம்மையார்(போலந்தில் நாட்டில் பிறந்தவர்) தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1898ம் ஆண்டு ரேடியத்தினைக் கண்டுபிடித்தார். கதிரியக்க ஆய்வில் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த மேரி கியூரி அம்மையார் கதிரியக்கத்தின் பாதிப்பினால் லூக்கேமியா நோயின்(இரத்தப் புற்று நோய்) காரணமாக 1934ம் ஆண்டு மரணமடைந்தார்.
விஞ்ஞானத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளான இரசாயனவியல்[1911], பெளதிகவியல்[1903] ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் மேரி கியூரி அம்மையார் ஆவார்.
பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்கின்ற பெருமை மேரி கியூரி அம்மையாருக்கே உரியது.

(03) சேர் ஹம்பேரி டேவி(1778-1829)இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சேர் ஹம்பேரி டேவி மிகச்சிறந்த இரசாயனவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.சேர் ஹம்பேரி டேவி, இளம் உதவியாளராக மருத்துக்கடைக்காரர் தொழில் ஈடுபட்டபோது பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் தீக்காயங்களுக்குள்ளாகினார். இரசாயனவியல் துறையில் ஆய்வுகளினை மேற்கொள்கின்றபோது பல்வேறுவகையான வாயுக்களினை உட்சுவாசிக்கும் பழக்கத்தினை டேவி கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் நைதரசன் ஒட்சைட்(சிரிப்பூட்டும் வாயு) மூலக்கூறுகளினை கொண்டு வலி நிவாரணிகளை கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. துரதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் அவரினை பலதடவைகள் மரணித்தின் விளிம்பிற்கே கொண்டுசென்றது.
அடிக்கடி நச்சு இரசாயன பாதிப்புக்குள்ளாகிய, இவரின் வாழ்வின் இரண்டு தசாப்தகாலத்தினை கடுமையான இரசாயன பாதிப்புடனேயே கழித்தார்.
நைதரசன் குளோரைட் [Ncl3] வெடிப்புச் சம்பவத்தில் இவரின் கண்கள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(04) மைக்கல் பரடே(1791-1867)


இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த மைக்கல் பரடே பிரபலமான இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் ஆவார். சேர் ஹம்பேரி டேவியின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணத்தினால், பரடே அவரின் உதவியாளரானார். சேர் ஹம்பேரி டேவியின் மின் பகுப்பு முறைமையினை மேம்படுத்தி, மின் காந்தவியல் துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவராவார். சேர் ஹம்பேரி டேவியின் துரதிர்ஷ்டமோ, பரடேயினையும் இரசாயனப் விபத்துச் சம்பவங்கள் விட்டுவைக்கவில்லை. நைதரசன் குளோரைட் வெடிப்புச் சம்பவம் பரடேயின் கண்களில் பாதிப்புக்களினை ஏற்படுத்தியது. மைக்கல் பரடே, தன் வாழ்நாளில் இறுதி நாட்களினை நீடித்த இரசாயன நச்சு பாதிப்பினுடனேயே கழித்தார்.

***

Saturday, November 13, 2010

பாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர்....
இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சார்ள்ஸ் டிக்கன்ஸ்(1812-1870) ஒரு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் வாழ்வில் திருப்புமுனையினை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

சார்ள்ஸ் டிக்கன்ஸ் ஆரம்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றுள் ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. கடைசியாக அவர் எழுதிய கதை பத்திரிகையொன்றில் பிரசுரமாகியது. அப்பத்திரிகையின் ஆசிரியர் கதையைப் பாராட்டி டிக்கன்ஸூக்கு ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். தனது கதைக்காக எந்தவித சன்மானமும் கிடைக்காத நிலையிலும் டிக்கன்ஸை ஆசிரியரின் குறிப்பு உற்சாகப்படுத்தியது. மனம்தளர்ந்து தனது எழுத்துப்பணியினை விட்டுவிட இருந்த அவருக்கு அந்தப் பாராட்டுரை மட்டும் கிடைக்காதிருந்திருந்தால் இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்திருக்கும்.

அவருக்கு கிடைத்த முதற்பாராட்டின் உற்சாகத்திலேதான் தொடர்ந்து எழுதி உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களினை ஆங்கில மொழிக்கு அவரால் தர முடிந்தது.

ஆகவே, உங்கள் பாராட்டுரையும் மற்றவர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி சிறந்த எழுத்தாளர்கள் பலரினை இந்த உலகத்துக்கு அறிமுகம்செய்ய உதவிசெய்யலாம்.


***

Wednesday, November 10, 2010

உலகில் மிகப்பெரிய எரிமலை.............உலகில் மிகப்பெரிய எரிமலையானது அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது. "மௌவ்னா லோ" என்றழைக்கப்படும் இந்த எரிமலைக்கு ஹவாய் மொழியில் "உயரமான மலை" என்ற பொருளாகும்.ஹவாய் தீவுகள் உருவாகுவதற்கு காரணமான 5 எரிமலைகளில் ஒன்றாக " மௌவ்னா லோ" எரிமலையானது விளங்குகின்றது.

இந்த எரிமலையானது, கடல் மட்டத்திலிருந்து 4170 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் இந்த எரிமலையின் அத்திவாரமானது கடலின் அடிமட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் " மௌவ்னா லோ" எரிமலையின் மொத்த உயரமானது 17000 மீற்றரிலும் (56000 அடி) அதிகமாகும். அவ்வண்ணம், பூமியில் மிக உயரமான மலைகளிலொன்றாகவும் " மௌவ்னா லோ" எரிமலையினைக் குறிப்பிடலாம்.

" மௌவ்னா லோ" எரிமலையானது ஹவாய் தீவுகளின் அரைப்பங்கிற்கு(50.5%) பரந்து வியாபித்து காணப்படுகின்றது. மௌவ்னா லோ எரிமலையின் பரப்பு 5271 km2 அத்துடன் இதன் கொள்ளளவு 80000 km3. அவ்வண்ணம் பரப்பளவிலும், கொள்ளளவிலும், உலகில் மிகப்பெரிய எரிமலையாக "மௌவ்னா லோ" விளங்குகின்றது.

உலகில் மிகவும் தொழிற்படு நிலையில் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் " மௌவ்னா லோ" எரிமலையானது, 1843ம் ஆண்டிலிருந்து இதுவரை 33 தடவைகள் வெடித்துக் குமுறியுள்ளது. இந்த எரிமலையின் அண்மைய வெடிப்புச் சம்பவமாக 1984 மார்ச் 24 - ஏப்ரல் 15 வரை வெடித்தமை பதிவாகியுள்ளது.

" மௌவ்னா லோ" எரிமலையானது, செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாமல் மிகவும் மென்மையான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டுள்ளதனால் பாதுகாப்பான எரிமலையாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இதிலிருந்து வெளியேறுகின்ற எரிமலைக் குழம்பானது (லாவா) குறைந்தளவான சிலிக்காவினைக் கொண்டிருப்பதுடன், பெருமளவில் திரவ நிலையிலும்[குறைந்தளவான பாகு நிலைமையினை கொண்டிருப்பதனால் ஆகும்] காணப்படுவதனாலாகும்.

செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாததன் காரணமாக " மௌவ்னா லோ" எரிமலைக் குமுறல்கள் அரிதாகவே பாரிய விபரீதங்களினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளனவாம்.

எரிமலை தீவாக விளங்கும் ஹவாய் தீவுகளானது, பசுபிக் பூமித் தட்டில் அமைந்து காணப்படுகின்றது. இந்தப் பிராந்தியமானது எரிமலைகள், சுனாமிகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பாதிப்புக்களின் அபாய மையமாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


============================================


உயிர் சேதங்களினை ஏற்படுத்திய " மெராபி" எரிமலை வெடிப்புச் சம்பவம்.....உலகில் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் " மெராபி" எரிமலை இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அதிகளவில் மக்கள் வாழ்கின்ற பிராயந்தியத்தில் அமைந்து காணப்படுகின்றது,கடந்த வாரம் முதற்கொண்டு " மெராபி" எரிமலை குமுற ஆரம்பித்ததிலிருந்து இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 200,000 இலும் அதிகமாகும்.

================================================

எரிமலை தொடர்பிலான எனது முன்னைய பதிவு.......

Sunday, November 7, 2010

உலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்
உலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன் தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய ஆக்கம்............( நன்றி - தினகரன் 04.10.2010)

****

Thursday, November 4, 2010

உங்களுக்குத் தெரியுமா?............

நீரினை விடவும் சனிக்கிரகம் அடர்த்தி குறைந்ததாகும்.....
சனிக்கிரகத்தின் அடர்த்தியானது(0.687 g/cm3), நீரின் அடர்த்தியினை விடவும் குறைவாகும்(0.998 g/cm3). அதாவது நீரில் சனிக்கிரகத்தினை இட்டால் சனிக்கிரகமானது மிதக்கும் எனலாம். சனிக்கிரகத்தின் விட்டம் 120,536 km ஆகும்.===============================================

வீதியின் குறுக்காக விமான ஓடுபாதைகள்
புகையிரதப்பாதைகளின் சந்திப்பு, அல்லது பஸ் பாதைகளின் சந்திப்பு அல்லது பாலங்களின் கீழே கப்பல் பாதைகளின் சந்திப்பு தொடர்பாகவே நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படியாயின் நீங்கள் விமானங்கள், வாகனப் போக்குவரத்துப்பாதையில் சந்திப்பது, குறுக்கிடுவது தொடர்பாக கேள்விப்பட்டதுண்டா?

ஆம்...... கீழே உள்ள படங்களில் வீதியின் குறுக்காக விமானம் தரித்திருப்பதன் காரணத்தினால் வாகனங்கள் காத்திருப்பதனை காண்கின்றீர்கள்.
ஆமாம்.........வீதியின் குறுக்கே காணப்படும் இந்த விமான ஓடுபாதைகள் ஜேர்மனி நாட்டில் காணப்படுகின்றதாம்.

===========================================

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை துவம்சம் செய்த இலங்கை அணி.......

நேற்று அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான Commonwealth Bank கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 01 விக்கட் வித்தியாசத்தில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது.

340 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 8 விக்கட்களினை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அந்தவகையில் 09 விக்கட்டில் அஞ்சலோ மத்தியூஸ்சுடன் ஜோடி சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஜோடி சாதனைமிகு 132 ஓட்டங்களினைப் பகிர்ந்து 27 ஆண்டுகால சாதனையினை முறியடித்தனர்.இதற்குமுன்னர் இந்த சாதனையினை 1983ம் ஆண்டு 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்திய அணியின் கபில்தேவ், மற்றும் சயீட் கிர்மானி ஆகியோர் வீழ்த்தப்படாத 126 ஓட்டங்களினை சிம்பாவே அணிக்கெதிராக மே.தீவுகளின் ரேன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் பெற்றமையே சாதனையாகப் பதிவாகியிருந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லசித் மாலிங்க(56) , அஞ்சலோ மத்தியூஸ் (77*)ஆகியோர் அரைச்சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிக்குத் தேவையான ஓட்டத்தினை சாதனை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

=========================================

தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.......
தீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையினை (05.11.2010) கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.....

***

Monday, November 1, 2010

மலைகளால் சிறப்புப்பெறும் ஆசியாக்கண்டம்....
உலகில் பரப்பளவில் மிகப்பெரிய கண்டமாக விளங்குவது ஆசியாக்கண்டமாகும். அத்துடன் உலகில் அதிகளவு மலைகளைக் கொண்ட கண்டமாக ஆசியாக் கண்டம் விளங்குகின்றது. அந்தவகையில் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த மலைச்சிகரங்களில் முதல் 56 மலைச்சிகரங்களும் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த முதல் 100 மலைச்சிகரங்களில் 71 மலைச்சிகரங்கள் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகில் மிக உயர்ந்த முதல் 10 மலைச்சிகரங்கள்....
1) எவரெஸ்ட் – இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8848 மீற்றர்

2) கே-2(கோட்வின் ஓஸ்ரின்) – கரகூரம் மலைத் தொடர் பாகிஸ்தான் ~ 8611 மீற்றர்

3) கன்செங்யுங்கா – இமயமலைத் தொடர் - நேபாளம்/இந்தியா ~ 8586 மீற்றர்

4) லுகாட்ஸ் – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8511 மீற்றர்

5) மகலு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8463 மீற்றர்

6) சோ ஒயு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8201 மீற்றர்

7) டொல்லாற்கிரி – இமயமலைத் தொடர் - நேபாளம் ~ 8167 மீற்றர்

8) மனாஸ்லு – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8163 மீற்றர்

9) நெங்கா பார்வெட் – இமயமலைத் தொடர் - பாகிஸ்தான்~ 8125 மீற்றர்

10) அன்னபூர்னா – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8091 மீற்றர்

***
Blog Widget by LinkWithin