Wednesday, October 27, 2010

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரதேவி சிலை....
நாளை (28.10.2010) அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு 124வது பிறந்தநாளாகும். அதனை முன்னிட்டு பிரசுமாகும் கட்டுரை....

அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் வானளாவ உயர்ந்து நின்று 124ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் விடுதலையினை வெளிப்படுத்தி புகழ் பரப்பி நிற்பதுதான் சுதந்திரதேவி சிலை(Liberty Enlightening the World)
.
அமெரிக்கப் புரட்சியின்போது ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் நாட்டுக்குமிடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும்முகமாக பிரான்ஸ் தேசத்தினால் ஐ.அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுதான் இந்த சுதந்திரதேவி சிலை ஆகும்.

சுதந்திரதேவி சிலையானது, சர்வதேச ரீதியில் நட்புறவினையும், விடுதலையினையும், ஜனநாயகத்தினையும் வெளிப்படுத்துகின்ற சின்னமாக விளங்குகின்றது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக அமெரிக்காவும், பிரான்ஸ் தேசமும் ஒன்றிணைந்து சிலையொன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. இதன்பிரகாரம், பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதுடன், சிலையினை பிரான்ஸ் தேசத்து மக்கள் நிர்மாணிப்பது எனவும் முடிவுசெய்தனர்.

சிலையினை நிர்மாணிக்க ஒத்துக்கொண்ட இரண்டு தரப்பினரையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. இதனால் பிரான்ஸ் தேசம் நிதியினை திரட்ட களியாட்டங்கள், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புக்கள் போன்ற முறைகளின் மூலம் நிதியினை திரட்டியதுடன், அமெரிக்க தேசம் நிதியினை திரட்ட கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், இன்னபிற நிகழ்வுகள் மூலம் நிதியினை திரட்டி நிதிப்ப்பற்றாக்குறையினை ஈடுசெய்தன.


பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி

சுதந்திரதேவி சிலையினை வடிவமைத்தவர் பிரான்ஸ் தேசத்தினைச் சேர்ந்த பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி[Frederic Auguste Bartholdi] ஆவார். பார்தொல்டி, சுதந்திரதேவி சிலையினை வடிவமைக்க பிரபல பொறியியலாளர் அலெக்சாண்டிரி குஸ்டாப் ஈபிள்[Alexandre Gustave Eiffel~ ஈபிள் கோபுரத்தினை வடிவமைத்தவர்] அவர்களின் ஆலோசனையினையும், உதவியினையும் உள்வாங்கிக் கொண்டார். பிரான்ஸ் தேசத்தில் சுதந்திரதேவி சிலை நிர்மாணிப்பு 1884ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது.

ஆனால், அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலையின் பீடத்துக்கான வேலைகள் மிகமெதுவாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. இதன் காரணத்தினால் ஜோசப் புலிட்ஸர்(புலிட்ஸர் பரிசு இவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றது.) தன்னுடைய " உலகம்" ["The World" ] என்கின்ற பத்திரிகையின் ஊடாக அமெரிக்க மக்களிடம் இதற்கான நன்கொடை நிதி திரட்டும் செயற்பாட்டினை ஊக்குவிப்பதில் பெரிதும் பாடுபட்டார். இதன்மூலம், சுதந்திரதேவி சிலையின் பீட நிர்மாணிப்புச் செயற்பாடுகள் 1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நிறைவடைந்தன.


பிரான்ஸ் தேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 151அடி & 1 அங்குலம் உயரமானதும், 225 தொன் நிறையுடையதுமான சுதந்திரதேவி சிலை பிரான்ஸ் போர்க்கப்பலில் 1885ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நியூயோர்க் துறைமுகத்தினை வந்தடைந்தது. 4 மாதகாலத்துக்குள் புதிய பீடத்தில் சுதந்திரதேவி சிலையானது நிலைநிறுத்தப்பட்டு 1886ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. சுதந்திரதேவி சிலையின் புதிய உயரம் 305 அடி & 1 அங்குலமாகும். இதன் உட்புறமாக 354 படிகளும், அதன் கிரீடத்தில் 25 ஜன்னல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திரதேவி சூடியிருக்கின்ற கிரீடத்தில் 7 கதிர்கள் உள்ளன. இது 7 சமுத்திரங்களையும், 7 கண்டங்களையும் குறிக்கின்றது. சுதந்திரதேவி இடது கையில் வைத்திருக்கின்ற நூலில் ஜூலை 4, 1776 என ரோமன் இலக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக சுதந்திரதேவி சிலை நிர்மாணிக்கப்பட்டாலும் இந்தச் சிலையானது நூற்றாண்டு விழா நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரே சுதந்திர தினப் பரிசாக அமெரிக்க மக்களுக்கு கிடைத்தது.

அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலினைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி வரை சுதந்திரதேவி சிலையானது பொது மக்களின் பார்வைக்கு தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.நா யுனெஸ்கோ அமையமானது சுதந்திரதேவி சிலையினை 1984ம் ஆண்டு உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

3 comments:

மதுரை சரவணன் said...

அருமையான தகவல்கள்.வாழ்த்துக்கள்

அழகி said...

66000 அப்பாவி மக்க​ளைக் ​ஈராக்கில் கொன்ற நாட்டுக்கு சுதந்திர​தேவி சி​லையும் ஒரு ​கேடா?

Loganathan said...

நண்பர்களின் கருத்துரைகளுக்கு நன்றிகள் ..........

Blog Widget by LinkWithin