Monday, March 8, 2010

ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்தவர்கள்

கடந்த 4ம் திகதி மே.தீவுகளின் கயானாவில் நடைபெற்ற மே.தீவுகள், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மே.தீவுகள் மண்ணில் கன்னி ஒருநாள் கிரிக்கெட் வெற்றியினைப் பதிவுசெய்து கொண்டது. சிம்பாப்வே அணியின் சார்பில் வுசு சிபாண்டா 162 பந்துகளை எதிர்கொண்டு 95 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் மே.தீவுகளுக்கெதிராக ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த 3வது வீரராக சிபாண்டா விளங்குகின்றார். முதல் இரண்டு இடங்களையும் பாகிஸ்தான் வீரர்கள் பெறுகின்றனர். அமீர் சொஹைல் 87 ஓட்டங்களை 167 பந்துகளை எதிர்கொண்டும்[1993, பேர்த்], ஜாவிட் மியண்டாட் 63* ஓட்டங்களை 167 பந்துகளை எதிர்கொண்டும் [1989, கிங்ஸ்டன்] முதல் இரு இடங்களை வகிக்கின்றனர்.


கிளென் ரேனர்

ஆரம்பத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் 60 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த வீரராக நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிளென் ரேனர் விளங்குகின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் எட்ஸ்பாஸ்டனில் நடைபெற்ற கிழக்கு ஆபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் கிளென் ரேனர் 201 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அடுத்த இடத்தினையும் கிளென் ரேனரே பெற்கின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஓல்ட் ரபேர்ட்டில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியில் கிளென் ரேனர் 177 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்றார். 3ம் இடத்தினை பாகிஸ்தான் அணியின் மொசின் கான் 1983ம் ஆண்டு நடைபெற்ற 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஓவலில் நடைபெற்ற மே.தீவுகள் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் மொசின் கான் 176 பந்துகளை எதிர்கொண்டு 70 ஓட்டங்களைப் பெற்றார்.



50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த வீரராக கனடா அணியின் அஷிஷ் வஹை விளங்குகின்றார். 2006-07 பருவகாலத்தில் நைரோபியில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் 172 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்களைப் பெற்றார்.





ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்து குறைந்த ஓட்டங்களைப் பெற்ற வீரராக இந்திய அணியின் கவாஸ்கர் விளங்குகின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் லோர்ட்ஸ்சில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கவாஸ்கர் 174 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார். இதில் ஒரு 4 ஓட்டம் உள்ளடங்குகின்றது.



***

3 comments:

தர்ஷன் said...

நட்சத்திரப் பதிவர் வாழ்த்துக்கள்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

உங்களுக்கு அன்பின் நன்றிகள் ......

ம.தி.சுதா said...

தகவலுக்கு நன்றி சகோதரா...

Blog Widget by LinkWithin