Tuesday, March 30, 2010

அறம் செய்வோம்உலகில் உயர்ந்தோர் உணர்ந்து உரைத்த
விதித்தன செய்தல் விலக்கின ஒழிதல்
சுருக்க மாகநாம் அறமெனக் கூறலாம்.
விரிவு வேண்டுமேல் வேதநன் னூற்களும்
நல்லன என்று விரிப்பன அனைத்தும்
அறமே யாகும் அவைகளைக் கொள்க.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்
எனபன முதலா அறத்தினைக் கொண்டு
நூல்வழி கடமைகள் ஆற்றல் நல்லறமே
அமைவுடை மனத்தில் அறமே வளருமே
அமைவோ ஒழுக்க அடிப்படை உடையது.
இல்லறம் நல்லறம் என்னே அற்புதம்
அறவழிச் செல்வம் ஆழிபோல் பெருகும்
அறமுறை தருவது அமைவுடைச் செல்வம்
அளவாய் உண்டு அளவாய் வாழ்வதே
ஆண்டவன் விதித்த அற்புத அறமே
உண்ணும் உணவு உடலை வளர்ப்ப போல்
செய்யும் அறமே வாழ்வை வளர்க்கும்.
அறம் வளரப் பாவம்தேயும் அதனால்
அறியாமை ஒழிந்து பற்றும் அற்றிடும்
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
இன்னா செய்யாமை இனியவை கூறல்
அவா அறுத்தல் அனைத்தும் அறமே
அறத்தை அனுதினம் காத்தல் வேண்டும்
சிறிது பிசகிடில் தீவினை சாருமே
ஆதலின் அறத்தை அறிவுறு நாள்முதல்
வளர்த்துப் பெருக்குதல் நல்வழி ஆகும்.

[படித்து சுவைத்த கவிதைகளில் ஒன்று...........]

***

Wednesday, March 24, 2010

தாமரை தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்அவுஸ்ரேலியாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தாமரைப்பூவிற்கு தன்னுடைய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய அற்புதமான சக்தி இருக்கிறது என்பதனை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒரு தாமரைப்பூவால் 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தை உற்பத்தி செய்ய செய்ய முடியும். வெளியே உள்ள சீதோஷ்ணம் 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவாக இருந்தாலும் அது அதிகமான வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு தாமரைப்பூ ஒரு வாட் உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறபடியால் 40 தாமரைப்பூக்கள் ஒரு 40 வாட்ஸ் மின்குமிழை எரியத்தக்க உஷ்ணத்தை உற்பத்தி செய்ய முடியும். எப்படி இந்த மலரால் இத்தகைய காரியத்தை செய்ய முடிகின்றது. அதாவது வெப்பத்தை உற்பத்தி செய்கின்றது என்பதனை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியாத புதிராக உள்ளதாம்.

இந்த மலரிலுள்ள வெப்பம் வண்டுகளையும் மற்ற பூச்சிகளையும் ஈர்க்கின்றது. அவைகள் இந்த மலருக்குள் அதிக நேரத்தை செலவழிக்கின்றன. இரவில் தாமரைப்பூ தன்னுடைய இதழ்களை மூடிக்கொள்ளும்போது, இந்தப் பூச்சிகளுக்கு வெளியே இருக்கின்ற குளிரிலிருந்து நல்ல வெப்பமான வீட்டை அமைத்து தருகின்றது. தாமரைப்பூவிற்குள் வண்டுகள் உணவினை உண்டு, இனப்பெருக்கம் செய்கிறது. வண்டுகள் மேல் தாமரை மலரின் மகரந்தம் முழுவதுமாக மூடிவிடுகின்றது. காலையில் வெளியே செல்லும்போது அவை வேறு இடத்தில் தாமரைச்செடிகள் உண்டாக உதவி செய்கின்றது.

தாமரைப்பூ போலவே இன்னும் இரண்டு வகையான செடிகள் தங்களுடைய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகின்றது.

***

Monday, March 22, 2010

பத்திரிகையில் என் வலைப்பூ அறிமுகம்

கடந்த 8ம் திகதி முதல் 14ம் திகதி வரையான ஒரு வாரகாலத்திற்கு யாழ்தேவி இணையத்தினால் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டேன்.

அந்தவகையில் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்த யாழ்தேவி இணையத்துக்கும், என்னுடைய வலைப்பூ பற்றிய அறிமுகத்தினை பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.[நன்றி-ஞாயிறு தினக்குரல் 21.03.2010]

***

Tuesday, March 16, 2010

ஒரேஞ் நிறமற்ற கரட்கள்.........கரட் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது செம்மஞ்சள் நிறம்தான்.... அந்த வகையில் கரட் தொடர்பிலான அரிய தகவல்கள்.........


உலக கரட் நூதனசாலை [ ஆம், உண்மையில் இது காணப்படுகின்றதாம்] தகவல்களின் பிரகாரம், உருளைக் கிழங்குப் அடுத்தபடியாக இரண்டாவது பிரபலமான காய்கறியாக கரட் விளங்குகின்றதாம். அத்துடன் கரட் பிரிட்டனில் மிகவும் அதிக பிரபல்யம் பெற்று விளங்குகின்றதாம்.


நிஜ கரட்கள் பல்வேறுபட்ட நிறங்களில் காணப்பட்டதாம். ஊதா, வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கரட் காணப்பட்டதாம். 1500ம் ஆண்டுப் பிற்பகுதிவரை செம்மஞ்சள் [ஒரேஞ்] நிறத்திலான கரட் காணப்படவில்லையாம். அதிகாரத்திலிருந்த டச்சு ரோயல் அரசாங்கம் செம்மஞ்சள் நிறத்தில் கரட்டினை பயிரிட எண்ணி வடக்கு ஆபிரிக்காவிலிருந்து மஞ்சள் நிற கரட் விதைகளைப் பெற்று மாற்றம் செய்து பயிரிட்டதாம்.
செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்ற கரட்டில் கரோட்டின் காணப்படுகின்றது, இது மனித உடம்புக்கு விற்றமின் A இனை வழங்கின்றது.

கரட்டின் நிறத்தினை ஏனைய காரணிகளான வெப்ப நிலை, மண் தன்மை, வெளிச்சம் ஆகியனவும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம். அதிகப்படியான நீர், குறைவான பகல் வெளிச்சம், 15° - 20°C (70° - 80°F) க்கு அதிகப்படியான வெப்ப நிலை ஆகியன கரட் நிறத்தின் உறுதி தன்மையில் பலவீனத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


**********இந்தப் பதிவினை இட வேண்டும் என எண்ணிய போது நம்ம வானொலி வெற்றி பண்பலையில் நிறங்களுடன் தொடர்புபடுத்தி இன்று 16/03/2010 விடியலில் பரிசு கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி.... [என்ன ஒற்றுமை???......]


***

Sunday, March 14, 2010

உலகவெப்பமயமாதலால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இமயமலைஇமயமலை பனிச்சிகரங்கள் உருகுவதன் காரணமாக 1.3 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர் நோக்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் தமக்கான நீர் வளத்துக்காக இமய மலை சிகரங்களிலேயே தங்கியுள்ளனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் இமய மலை சிகரங்களில் அச்சுறுத்துகின்ற வேகத்தில் பனி உருகுவதன் காரணமாக ஆசியக் கண்டத்தில் அதிகப்படியான வரட்சி நிலையினை இது ஏற்படுத்தலாம் என எச்சரிக்கைச் செய்திகள் விடப்படுகின்றன.

2400 கி.மீற்றருக்கும் அதிகமான தூரம் இமயமலை சிகரங்கள்; பாகிஸ்தான், இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் என பரந்து காணப்படுகின்றது. ஆசியாவின் பிரதான 9 மிகப்பெரிய ஆறுகளுக்கு இமயமலை சிகரங்களே பிரதான நீர் வழங்கும் ஊற்றாக காணப்படுகின்றது. இந்த ஆறுகளை நம்பி 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

இந்தப் பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலையானது 0.15 தொடக்கம் 0.6 டிகிரி செல்சியஸ் வரை [0.27- 1.08 டிகிரி பரனைற்] அதிகரித்தவண்ணமுள்ளது. இதன் காரணமாக சிகரங்கள் சுருங்கும் வேகமானதும் அதிகரித்தவண்ணமுள்ளது.

காலநிலை மாற்றங்களின் காரணமாக எதிர்வருகின்ற 40 வருடங்களில் அதிகமான பனிச்சிகரங்கள் இல்லாமல் மறைந்துபோய்விடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பிரதான .நா நிறுவனமான காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவினர் [IPCC] கருத்துத்தெரிவிக்கையில் இமயமலை பனிச்சிகரங்கள் 2035ம் ஆண்டளவில் பிரதான மாறுதல்களை வெளிப்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் உலகவெப்பமயமாதலின் விளைவுகளை இந்தப் பிராந்தியத்தில் உணரக்கூடியதாக தெரிவிக்கின்றனர்.ஆய்வுகளின் பிரகாரம், அதிகரித்த வேகத்தில் சிகரங்கள் உருகுவதன் காரணமாக சீனா தேசத்தில் குறுகிய காலத்தில் வெள்ளப்பெருக்குகள் அதிகரிக்கலாம் என சிங்குவா செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நீண்ட காலத்தில் ஆறுகளின் நீர்ப்பிரவாகத்தில் குறைவுகள் ஏற்பட்டு மேற்கு சீனாவின் பெருமளவான பகுதிகள் பாதிப்பினை எதிர்நோக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்ப் பற்றாக்குறை காரணமாக உலக அதிகளவு சனத்தொகையினை கொண்ட சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் பங்களாதேஷ் நாட்டின் பிரதான நதிகள் வரட்சி நிலையினை அடையலாம் என IPCC தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அங்கு ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளில் மாறுதல்கள் ஏற்படலாம்.

இமயமலையின் பனிச்சிகரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நீண்ட காலத்தில் ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் எனவே உலகவெப்பமயமாதலுக்கு காரணமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் விரைந்து செயற்பட வேண்டுயதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றது எனலாம்.


***

Friday, March 12, 2010

புராதன தொழில்நுட்ப இயந்திரம் கண்டுபிடிப்பு
பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என நம்பப்படுகின்ற அசாதாரண தொழில்நுட்ப இயந்திரமொன்றினை அன்டிகைதேரா தீவினை அண்மித்த கடலின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த கண்டுபிடிப்பானது அனைத்துலக சமூகத்தினையும், புராதன உலகின் தொழில்நுட்பமானது ஆச்சரியப்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப இயந்திரமானது கி.மு 2 ம் நூற்றாண்டினை சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை இந்த இயந்திரமானது வானியல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவும், அத்துடன் இது சூரிய சுழற்சியின் அடிப்படையில் செயற்பட்ட ஒருகணனிஇயந்திரமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இயந்திரம் மூலம் மாதம், நாள் மற்றும் மணிக் கணக்கினையும் அத்துடன் லீப் வருட கணக்கினையும் கணிப்பிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் மூலம் இராசி சக்கரத்துக்கு எதிராக சூரியன் , சந்திரன் ஆகியவற்றின் நிலைவிடங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி கிரகங்களின் வானியல் அமைவிடத்தினையும் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இயந்திரமானது விஞ்ஞான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக சமூக தொழிற்பாடுகளுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரேக்க தேசத்தில் ஒவ்வொரு 2 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு தடவை பிரதான மெய்வல்லுநர் விளையாட்டுக்கள்[ஒலிம்பிக் போன்றவை] நடைபெற்றன. இது போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கான திகதிகளை இவை காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.


***

Thursday, March 11, 2010

நலமாக வாழ உப்பினைக் குறைப்போம்உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது நம்மிடையே பொதுவாக பாவனையிலுள்ள ஒரு பழமொழி ஆகும். உப்பிலுள்ள போதுமானளவு சோடியமானது நம்முடைய என்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றது. எம்முடைய உணவில் அதிகளவு உப்புச் சேர்வதன் காரணமாக உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் [Type 2] ஆகியன ஏற்படுவதற்கு உப்பு காரணமாகின்றதாம்.

உலக சுகாதார அமையம் மற்றும் உணவு விவசாய அமையம் ஆகியவற்றின் அறிக்கையின் பிரகாரம் ஒருவர் நாளொன்றுக்கு 5கிராமுக்கும் [2கிராம் சோடியம்] குறைவான சோடியம் குளோரைட்டினையே நுகரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம் இரத்தத்தில் உப்பானது உணவின் மூலமாகவே பிரவேசித்து, இதன் காரணமாக இரத்தத்தின் அழுத்த நிலையானது பாதிக்கப்படுகின்றதாம்.

ஒருவர் குறைந்தளவு உப்பினை நுகர்வதன் காரணமாக இருதய நோய்கள், மூளை கட்டிகள் போன்ற நோய்களின் பாதிப்புக்களுக்கு ஆட்படுவது குறைந்தளவே ஆகும். 1 கிராம் சோடியம் குளோரைட் என்னும் போது இது 393.4 மில்லிகிராம் சோடியமாகும். அமெரிக்க சுகாதார திணைக்கள தகவலின் பிரகாரம், அமெரிக்கா முழுவதும் ஸ்ரோக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் காரணமாக 8லட்சம் பேர் மரணிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகளவு உப்பினை நுகர்வதன் காரணமாக சிறுநீரக கற்கள் தொடர்பிலான நோய்கள், ஒஸ்ரியோபொரொசிஸ், வாயுத் தொல்லை, புற்று நோய் ஆகியன ஏற்படுவதற்கு இது வழிவகுப்பதாக கண்டறிந்துள்ளனர்.

எம்முடைய சாதாரண உடம்புக்கு அத்தியாவசியமாக அயடின் தேவைப்படுகின்றது என்பது முக்கியமானதாகும். அதேவேளை எம்முடைய உணவில் உப்பின் அளவினைக் குறைந்தளவு பேணுவோம், நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

குறிப்பு - நாம் நாளொன்றுக்கு 3கிராம் உப்பினை நுகர்வது போதுமானதாம்.......

***

Wednesday, March 10, 2010

தடைப்பட்ட நயாகாரா நீழ்வீழ்ச்சி..........

தடைப்பட்ட நயாகாரா நீழ்வீழ்ச்சி..........

1848ம் ஆண்டு நயாகாரா நீழ்வீழ்ச்சியில் அரை மணி நேரம் நீர் கொட்டவில்லையாம். ஏனெனில் நயாகாராவுக்கு நீர் வழங்குகின்ற பிரதான ஆற்றிலிருந்து நீர் வருவதனை பனிக்கட்டிகள் தடுத்துவிட்டமை தான் காரணமாம்.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உலகில் தனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்(!) கொண்ட ஒரே இடம்.......

தனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்(!) கொண்டு அமைந்துள்ள உலகின் ஒரே இடம்- Westward Ho!
இது டேவொன்,இங்கிலாந்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமமாகும்.***************************************
ரொஜர் பெடரர் ஒரு கிரிக்கெட் பிரியராம்!!!

டென்னிஸ் வரலாற்றில் ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ள சுவிற்சர்லாந்து நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒரு கிரிக்கெட் பிரியராம் என்பது ஒரு சுவாரஸ்சியமான விடயமாகும்.

ரொஜர் பெடரரின் தாயார் தென்னாபிரிக்கா நாட்டினைச் சேர்ந்தவராம் . தென்னாபிரிக்கா நாடானது கிரிக்கெட் விளையாட்டுக்குப் பேர் போன நாடாகும். அந்தவகையில் ரொஜர் பெடரருக்கு கிரிக்கெட் விளையாட்டினைப் பிடிக்குமாம்.
டென்னிஸ் நட்சத்திரம் ரொஜர் பெடரர் இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.***

Tuesday, March 9, 2010

தெரிந்த ஒஸ்காரில் தெரியாதவை.......

*உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதாக ஒஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. 1929ம் ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட விருதானது அக்கடமி விருதுகள் [Academy Awards] என்றே அழைக்கப்பட்டது. பின்னரே இது ஒஸ்கார்[ Oscar] விருதாக மாற்றம் பெற்றது.

*1வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வானது The Blossom Room of The Hollywood Roosevelt Hotel - Los Angels இல் 1929ம் ஆண்டு நடைபெற்றது.

*1934ம் ஆண்டு நடைபெற்ற 6வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த நடிகருக்கான 1வது விருதினை கத்தரின் ஹெப்வேர்ன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் நிகழ்வின் போது வழங்கப்படும் விருதின் நிறையானது 7 பவுண்ட்ஸ்கள் [3.1752kg] ஆகும்.*அதிகளவு ஒஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களாக - The Lord of The Rings : The Return of The King ,Titanic, Ben Hur விளங்குகின்றது. இவை மொத்தமாக 11 விருதுகளை அள்ளிக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

*கிகி, தி லொஸ்ட் எம்பர் ஆகிய திரைப்படங்கள் 9 ஒஸ்கார் விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*முதன்முதலாக முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றவராக வால்ட் டிஸ்னி விளங்குகின்றார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது வால்ட் டிஸ்னி முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*1931ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது சம நிலையில் முடிந்த மிகச் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றவர்கள் வாலஸ் பெர்ரி மற்றும் பிரெட்ரிக் மார்க் ஆகியோராவர்.

*தொடர்ந்து இரு வருடங்கள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக, 1993ல் பிலடெல்பியா & 1994ல் பாரஸ்ட் காம்ப் ஆகிய திரைப்படங்களில் நடித்த டாம் ஹேங்ஸ் விளங்குகின்றார்.

*மூன்று முறை ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக ஜாக்கிஸ் ஒய்ஸ் கோல்டியூ விளங்குகின்றார். இவர் 1956,1959, 1964ம் ஆண்டுகளில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*குறைந்த வயதில் ஒஸ்கார் விருது பெற்றவராக நடிகை ஹெர்லி டெம்பிள் விளங்குகின்றார். இவர் 6 வயதில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் விருது பெற்ற முதலாவது வர்ணத்திரைப்படம்- Gone With The Wind

*ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக தெய்வமகன் விளங்குகின்றது. [1969ல் - சிவாஜி நடித்தது]

*ஒஸ்கார் விருது பெற்ற மனிதரல்லாத முதல் கதாபாத்திரம் [கார்ட்டூன்] மிக்கி மவுஸ் ஆகும்.*இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக்கிலான ஒஸ்கார் சிலைகளே வழங்கப்பட்டன. காரணம் உலக மகாயுத்தத்தின் போது உலோகங்களுக்கு நிலவிய அருமைத் தன்மையே காரணமாகும்.

*ஒஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குனராக Kathryn Bingelow விளங்குகின்றார். 2010ம் ஆண்டு நடைபெற்ற 82வது ஒஸ்கார் நிகழ்வின் போது தான் இயக்கிய The Hurt Locker திரைப்படத்துக்காக விருது பெற்றார்.*ஒஸ்கார் விருது பெற்ற முதல் தமிழராகவும் , முதல் இந்திய இசையமைப்பாளராகவும் .ஆர்.ரஹ்மான் விளங்குகின்றார்.
***

Monday, March 8, 2010

ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்தவர்கள்

கடந்த 4ம் திகதி மே.தீவுகளின் கயானாவில் நடைபெற்ற மே.தீவுகள், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மே.தீவுகள் மண்ணில் கன்னி ஒருநாள் கிரிக்கெட் வெற்றியினைப் பதிவுசெய்து கொண்டது. சிம்பாப்வே அணியின் சார்பில் வுசு சிபாண்டா 162 பந்துகளை எதிர்கொண்டு 95 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் மே.தீவுகளுக்கெதிராக ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த 3வது வீரராக சிபாண்டா விளங்குகின்றார். முதல் இரண்டு இடங்களையும் பாகிஸ்தான் வீரர்கள் பெறுகின்றனர். அமீர் சொஹைல் 87 ஓட்டங்களை 167 பந்துகளை எதிர்கொண்டும்[1993, பேர்த்], ஜாவிட் மியண்டாட் 63* ஓட்டங்களை 167 பந்துகளை எதிர்கொண்டும் [1989, கிங்ஸ்டன்] முதல் இரு இடங்களை வகிக்கின்றனர்.


கிளென் ரேனர்

ஆரம்பத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் 60 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த வீரராக நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிளென் ரேனர் விளங்குகின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் எட்ஸ்பாஸ்டனில் நடைபெற்ற கிழக்கு ஆபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் கிளென் ரேனர் 201 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அடுத்த இடத்தினையும் கிளென் ரேனரே பெற்கின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஓல்ட் ரபேர்ட்டில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியில் கிளென் ரேனர் 177 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்றார். 3ம் இடத்தினை பாகிஸ்தான் அணியின் மொசின் கான் 1983ம் ஆண்டு நடைபெற்ற 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஓவலில் நடைபெற்ற மே.தீவுகள் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் மொசின் கான் 176 பந்துகளை எதிர்கொண்டு 70 ஓட்டங்களைப் பெற்றார்.50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த வீரராக கனடா அணியின் அஷிஷ் வஹை விளங்குகின்றார். 2006-07 பருவகாலத்தில் நைரோபியில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் 172 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்களைப் பெற்றார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்து குறைந்த ஓட்டங்களைப் பெற்ற வீரராக இந்திய அணியின் கவாஸ்கர் விளங்குகின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் லோர்ட்ஸ்சில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கவாஸ்கர் 174 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார். இதில் ஒரு 4 ஓட்டம் உள்ளடங்குகின்றது.***
Blog Widget by LinkWithin